பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

பெண்களுக்கு. காந்தள் மலர் மலரும் இடம் இந்தத் தமிழ்நாட்டு மலைச்சாரலில் உள்ள சோலைகள். தேவலோகத்து அரம்பையர் ஆடிப்பாட, இந்தச் சோலைகளுக்கு வருகிறார்கள். தேவ லோகத்தில் கற்பக மரத்தின் பூத்தான் கிடைக்கும். அது பொன் நிறமாக இருக்கும். வேறு நிறம் இல்லை. ஆனால் பூமியில் இருக்கும் மலருக்குப் பலவகையான வண்ணம் உண்டு; மணம் உண்டு.

செக்கச் செவேலென்றிருக்கும் வெட்சிப் பூவினாலும் கருநீல நிறமுள்ள குவளை மலர்களாலும் அவ்வணங்குகள் தங்கள் கூந்தலைச் சிங்காரம் செய்து கொள்கிறார்கள். எழில் நிறைந்த வண்ணப் பூக்களால், அந்தப் பெண்கள் தாங்கள் விழைகின்றவாறே அலங்காரம் செய்து கொள்வதற்கு ஏற்ற பொருள்களை அந்தச் சோலைகள் தருகின்றன. ஆகையால் மலை உச்சியில் இருக்கிற பூம்பொழில்களுக்கு சூரர மகளிர் வருகிறார்கள். வந்து அலங்காரம் பண்ணிக்கொண்டு, "கோழிக் கொடி நெடிது வாழ்க!" என்று வாழ்த்தி ஆடுகிறார்கள்.

உடனே, நக்கீரர் பேய் மகளின் ஆடலைச் சொல்கிறார். அணங்குகளுடைய அழகையும் ஆடலையும் வருணித்தபிறகு பேயின் அழகை வருணிக்கிறார். அதன் தலைமயிர் உலர்ந்து பரட்டையாக இருக்கிறது. முன்னால் அரமகளிரது கூந்தல், ஒத்து வளர்ந்து நெய்ப்போடு கூடியதாக இருக்கிறது எனச் சொன்னார். இங்கே பேய் மகளின் தலைமயிர் உலர்ந்து, வறண்டு பறட்டையாகக் கிடக்கிறது என்கிறார். பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்து, வரிசையாக, அழகாக இல்லாமல் ஒரே கோரமாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கிலே பிறழ்ந்து இருக்கின்றனது; கோரப் பற்கள். வாயோ பேழ்வாய்; ஆழமான பெரிய வாய். கண்ணோ? எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிற விழிகள்; சுழல்விழி. அரமகளிர் தம்முடைய காதுகளில் சிவந்த அசோகந்தளிர்களைச் செருகியிருக்கிறார்கள் என்று சொன்னார். பேய் மகளிரது காதோ மார்பு வரையில் தொங்குகிறது. மார்பிலுள்ள தனங்களோடு மோதுகிறது. கழன்று விடுமோ என்று தோன்றும் கண்களையுடைய கோட்டானும் பாம்பும் காதில் ஆபரணம் போலத் தொங்குகின்றன. பாம்பிலே கூகையைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாள் பேய்மகள்.

223