பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அரமகளிரது உடம்பு வழவழவென்று பொலிவும் நிறமும் பெற்று மெருகோடு இருக்கின்றது. ஆனால் பேய் மகளின் உடம்பு எப்படி இருக்கிறது? வயிறு நன்றாக வெளியிலே தெரிகிறது. உடம்பு சொர சொரவென்று இருக்கிறது. அவள் பூமியதிர நடந்து வருகிறாள். அவள் நடையைக் காண்பவர் உள்ளம் திடுக்கிடுகிறது. அவள் கொம்மாளம் போடுகிறாள். சூரபன்மன் முதலிய அசுரர்களை, முருகன் தன் திருக்கரத்திலேயுள்ள வேலினால் சங்காரம் பண்ணினானே, அந்தப் போர்க் களத்தில் கொம்மாளமிடுகிறாள். 'மலைமலையாக அசுரக் கூட்டங்களைக் கொன்று குவித்திருக்கிறான். நமக்கு உணவு போட்டிருக்கிறான்' என்று அந்த இடத்திலே போய் முருகனை வாழ்த்திக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஆடுகிறாள். அவளுடைய கைநகம் வாச்சி போல் இருக்கிறது. அந்த நகத்தினால் பிணங்களின் சதையைப் பிடுங்கிப் பிடுங்கித் தின்கிறாள். ரத்தத்தை அளைகிறாள். அவள் கைவிரல் ரத்தத்தை அளைந்து சிவப்பாக இருக்கிறது.

நாம் பனை நுங்கு சாப்பிட்டிருக்கிறோம். பனை மரத்தின் அடியிலே போய், நுங்கின் புற ஒடுகளை நீக்கிவிட்டு, அப்படியே உள்ளே இருக்கும் நுங்கை இரண்டு கட்டைவிரலாலும் எடுத்துச் சாப்பிடுவது ஒரு தனிச் சுவை. நுங்கை எடுத்துவிட்டால், அது இருந்த இடம் பள்ளமாக இருக்கும். இந்தப் பேய் மகள் நுங்கு சாப்பிடுவது போல ஒரு காரியம் செய்கிறாள். இறந்து கிடக்கும் அசுரர்களின் கண்ணை, ரத்தம் தோய்ந்த தன் கைவிரல்களிலுள்ள கூரிய நகத்தினால் அப்படியே தோண்டி எடுத்துத் தின்கிறாள்; நுங்கு எடுக்கப்பட்ட பின்னுள்ள பனம்பழம் போல் தலை இருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு கண்டார் பயப்படும்படியாக ஏந்தி வருகிறாள். அவள் வாய் நிணத்தை மென்று கொண்டேயிருக்கிறது. சரியானபடி உணவு கிடைத்தால் ஆட்டம் போடத் தோன்றும் அல்லவா?

'துணங்கை தூங்க.'

அவள் துணங்கைக் கூத்து ஆடுகிறாள். ஆண்டவன் சூர சங்காரம் செய்ததினால் வாழ்வு அடைந்தவர்கள் தேவர்கள். தேவலோகப் பெண்கள் அவன் புகழைப் பாடி ஆடிக் களிக்கிறார்கள். ஆண்டவன் சூரசங்காரம் செய்ததனால் பகைவர்கள் போர்க்களத்தில்

224