பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆனந்தத் தேன்

பார்க்கிறான்; அதாவது, உன்னத திருஷ்டி உடையவனாகிறான். பெரிய மலைக்குப் பக்கத்தில் தான் இருப்பதைப் பார்க்கிறான். உலக இயலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய உண்மையைப் பார்க்கிறான். இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு இறைவனுடைய திருவருள் வேண்டும்; அவன் அருளொளி கிடைக்க வேண்டும். அஞ்ஞானமாகிய இருட்டில் அவன் இவற்றை எல்லாம் பார்க்க முடியாது. எத்தனை தலங்களுக்குப் போனாலும் பயன் இல்லை. எத்தனை முறை ஆகமங்களைப் புரட்டிப் பார்த்தாலும் உண்மை விளங்காது. மாணிக்க வாசகர் சொல்கிறார்:

"இத்தந் திரத்திற் காண்டுமென் றிருப்போர்க்கு
அந்தத் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்"

இருட்டிலே ஒருவன் உட்கார்ந்து கொண்டு புத்தகங்களின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். அதில் ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்கிறான். எப்படித் தெரியும்? விளக்கைப் போட்டால் புத்தகங்களிலுள்ள எழுத்துத் தெரியும். அப்படித்தான் ஆகமங்களைப் படித்து பார்த்துவிட்டுப் பொருள் புரியவில்லை என்கிறான்; இவன் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு அதன் ஏடுகளைப் புரட்டுகிறான். ஆனால் ஆண்டவன் அருள் ஒளி கிடைத்த மாத்திரத்திலே அதில் எத்தனை எத்தனையோ பொருள்கள் புலப்படுகின்றன.

ஞான மலை

ருணகிரியார் இன்ப அநுபவத்தை எப்படிப் பெற்றார்? அவருக்கு முதலில் இறைவன் அருளால் ஒளி தோன்றியது; ஒளி தோன்றிய மாத்திரத்தில் நிலம் தெரிந்தது. நிலம் மாத்திரம் தெரிந்ததோடு நிற்கவில்லை. ஒரு பெரிய மலை விளைந்தது.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து.

ஒளியில் விளைந்தது வெறும் சாதாரண மலையா? அது ஞான பூதரம். பூதரம் - மலை. அது பெரிய ஞான மலை. வெறும் கல் மலை அல்ல. விளைந்தது என்றால் உண்டாயிற்று என்று பொருள். திடீரென்று பெரிய மலை எப்படி உண்டாயிற்று? எந்தப் பொருளையும் புதியதாகப் பார்க்கும்போது அது புதியது என்று சொல்வது வழக்கம். நான் ஒரு புதிய ஊரைக் கண்டேன்

261