பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/287

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வள்ளிகோன்.உபதேசம்,

மகளிர் மொழியை தேன் என்றும், பாகு என்றும் உவமித்துச் சொல்வது வழக்கம். வள்ளி நாயகியின் மொழியை அவ்வாறு உவமித்த இடங்கள் இருக்கின்றன.

தேன்மொழி

வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில் வள்ளியின் மொழியைத் தேனென்று கூறுகிறார் குமரகுருபரர். அழகான பாட்டாதலால் அதை இப்போது சிறிது பார்க்கலாம்.

ராமலட்சுமணர்கள் ராவண சங்காரம் செய்துவிட்டுத் தம் பாவங்களைப் போக்குவதற்காக வைத்தீசுவரன் கோயிலுக்கு வந்து பூசை பண்ணினார்களாம். அத்தகைய சிறப்புடைய தலம் அது. அங்கே எழுந்தருளியிருக்கிற வைத்தியநாதப் பெருமானையும், அவனுடைய அருட்சக்தியாகிய பாலாம்பிகையையும் பார்க்க வேண்டுமென்று திரிமூர்த்திகள் வருகிறார்கள். தேவரும் முனிவரும் பக்தருமாகப் பலர் எம்பெருமானது கோயில், வாசலிலே வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள். வைத்தியர் வீட்டிலும், மந்திரம் போடுகிறவர் வீட்டிலும் எப்போதும் கூட்டம் இருப்பதற்குக் கேட்க வேண்டுமா? வைத்தியநாதப் பெருமான் ஒரு பெரிய வைத்தியர். தையல் நாயகியோ பெரிய மந்திரக்காரி. தீராத நோயுடையவர்கள் டாக்டரிடம் வந்து ஆக வேண்டும். தீராத வினை தீர்த்த தம்பிரான் என்று வைத்தியநாத சுவாமிக்குப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள் மந்திரக்காரி வீட்டுக்கு வராமல் என்ன செய்வது? தையல்நாயகி சந்நிதியில் பேய்கள் ஆடும். அவர்கள் வீட்டில் எந்தக் காலத்திலும் கூட்டத்திற்குப் பஞ்சம் இராது. மும்மூர்த்திகளும் அவர்களுடைய தரிசனத்திற்காக வந்து காத்திருக்கிறார்கள். ஆனால் வாசலிலே பெரிய கூட்டம் நிற்கின்றது. அந்த வரிசையில் நின்றால் அவர்களுடைய தரிசனம் கிடைப்பதற்கு நெடுங்காலம் ஆகும் போல் இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

அப்பொழுது ஒருவர் வருகிறார். "திரிமூர்த்திகளாகிய நீங்களா இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எம்பெருமானையும் எம் பெருமாட்டியையும் காண்பதற்கு நான் உங்களுக்கு ஒரு தந்திரம் சொல்லித் தருகிறேன். இந்த இரண்டு பேரையும் பார்ப்பதற்கு

279