பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சும்மா இருக்கும் எல்லை

சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம்
இழந்துசும் மாஇருக்கும்
எல்லையுள் செல்ல எனைவிட்ட
வா! இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச்செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத்
தோள் அண்ணல் வல்லபமே!

(பகைவரோடு போராடுகின்ற வேலையுடைய முருகன், கேட்பதற்கு இனிய கொல்லிப் பண்ணின் தன்மையைச் சேர்க்கின்ற சொல்லையுடையவளும், கற்களையுடைய மலையில் இருந்தவளும், கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயையுடையவளுமாகிய வள்ளி நாயகியைத் தழுவுகின்ற பெரிய மலை போன்ற தோள்களையுடைய பெருமை பெற்ற முருகனுடைய அருள் வல்லமை, சொல்வதற்கு இல்லை என்று கருவி கரணங்களெல்லாம் நழுவ அவற்றை இழந்து சும்மா இருக்கும் எல்லைக்குள்ளே செல்லும்படி என்னை விட்டவாறு என்ன ஆச்சரியம்!

விட்டவா-விட்டவாறு என்னே! இகல்-இகலுகின்ற; பகைவரோடு மாறுபடுகின்ற, கொல்லி-ஒரு பண். வரை-மலை. வல்லி-வள்ளிநாயகி. புல்கின்ற-அணைகின்ற; புல்குகின்ற என்பது செய்யுளை நோக்கி விகார மாயிற்று. மால்-பெருமை. வல்லபம்-ஆற்றல். வல்லபம் விட்டவா!)