பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பகையான ஒன்று வேண்டும்; நமக்குப் பயம் கொடுக்காமல், பார்ப்பதற்கு எழிலாக, பாம்புக்கு அச்சத்தைத் தரக்கூடிய ஒன்று வேண்டும். அதுதான் மயில். மயில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. தோகை விரித்து ஆடுகையில் மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் அது பாம்புக்குப் பகை. எம் பெருமான் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தைப் பாருங்கள். அதன் காலில் ஒரு பாம்பு இருக்கும். வளைந்து கொண்டு இருக்கிற பாம்பை மயில் கொத்திக் கொத்தி அடக்குகிறது. பாசம் என்ற பாம்பை அடியோடு ஒழிக்கக் கூடிய பிரணவ தத்துவமாக மயில் விளங்குகிறது. அது மட்டும் அன்று.

வாசி யோகம்

மது உடம்பில் ஆறு ஆதாரங்கள் உண்டு. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய அந்த ஆறில் முதலாவது மூலாதாரம். முதுகுத்தண்டினூடே ஓடுகிற நடு நரம்புக்கு சுழுமுனை என்று பெயர். அது இந்த ஆறு ஆதாரங்களையும் உருவிச் செல்கின்றது. மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பி மேலே ஏற்றி ஆறு ஆதாரமும் கடந்து ஸஹஸ்ராரம் வரைக்கும் செல்லும்படி செலுத்துவதை வாசி யோகம் என்பார்கள். மூலாக்கினியை எழுப்பி ஏற்றும்போது இடையிலே குண்டலினி என்ற தடை ஒன்று உண்டு. அது சுருண்ட பாம்பு போல இருப்பது. அந்தத் தடையைப் போக்கி அதை எழுப்பி ஓட்ட வேண்டும். அப்பால் மூலக்கணலை மேலே எழுப்பி மேலுள்ள சந்திர மண்டலத்தளவும் செலுத்தினால் அங்கே உள்ள அமுதம் பொழியும். இவ்வாறு யோக நூல்கள் கூறும்.

இந்தக் குண்டலினி யோகத்தில் வெற்றி பெற மயில் உதவி செய்யும்; மயில் வாகனப் பெருமானை நினைத்தால் யோகத்தில் சித்தி உண்டாகும். பாம்பை விரட்ட உதவும் மயில் குண்டலினி என்னும் பாம்பையும் எழுப்பி ஓடச் செய்யும்.

"வாசியாலே மூலக்கணல் வீசியே சுழன்றுவரப்
பூசை பண்ணிப் பணிந்திட மாசறக்குண் டலியைவிட்
டாட்டுமே - மேல் - ஒட்டுமே”

என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுகிறார். குண்டலினி ஆகிய பாம்பை ஆட்டுவது மயில். யோகம் செய்து சித்தி பெற்ற

308