பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அழகை நாம் பார்ப்பதற்காக. பார்ப்பதனால் மனம் ஒன்றி இன்புறுபவர்களும் நாமே. அன்புடைய தாய் தன் குழந்தையைச் சிங்காரிப்பது போல, இறைவன்பால் அன்புடைய பக்தர்கள் இறைவனைச் சிங்காரித்தார்கள்.

அருணகிரிநாதர் கந்தபிரானுக்கு அலங்காரம் செய்தார், நம் மனம் அவனிடத்திலே கவிய வேண்டும் என்பதற்காக. ரோஜாப்பூத் தோட்டம் போட்டிருப்பவன் தன் பெண்ணின் கல்யாணத்துக்கு ரோஜாப் பூவினாலேயே பெரிய பந்தல் போட்டு விடுவான். அதைப்போல அருணகிரிநாதப் பெருமான் தம்மிடம் உள்ள சிறந்த மலர் போன்ற தமிழ்ச் சொற்களால் கந்தருக்கு அலங்காரம் பண்ண வேண்டுமென்று பார்த்தார்.

சொல் அலங்காரம்

லங்காரம் பண்ணுகிறவர்களுக்கு வேண்டிய பொருள்கள் ஆடை, அணி, மாலை முதலியன அல்லவா? நல்ல நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு அலங்காரம் பண்ணலாம்; ஆனால் அம்மலர்கள் மறுநாள் வாடிவிடும். நல்ல ஆடைகளால் அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம்; அந்த ஆடையும் நாளடைவில் கிழிந்து விடும். தங்க ஆபரணங்களால் அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம்; அந்த ஆபரணங்களும் சில ஆண்டுகளில் தேய்ந்து போகும். இவையெல்லாம் என்றோ ஒரு நாளைக்கு அழிவன. அருணகிரிநாதர் பார்த்தார். தங்க வியாபாரிகள் தங்கள் பேட்டையிலுள்ள முருகனுக்குத் தங்கத்தினாலேயே அலங்காரம் பண்ணுவதும், வைர வியாபாரிகள் தங்கள் பேட்டையிலுள்ள முருகனுக்கு வைரத்தாலேயே ஜோடனை செய்வதும் வழக்கமல்லவா? அருணகிரிநாதர் பல காலத்துக்கு மறையாத, கிழியாத, தேயாத ஒரு பொருளினாலே, நெடுங்காலம் உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய ஒரு பொருளாலே, அலங்காரம் பண்ண வேண்டுமென்று விரும்பினார். சொல்லாலேயே அலங்காரம் பண்ணினார்.

கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆவதில்லை. சொல் எல்லாம் நல்ல சொல் ஆவதில்லை. நாமும் சொல்லை வைத்திருக்கிறோம். அவை எல்லாம் வெறும் சொல். ரோடு போடுகிற கல்லுக்கும் கல் என்றுதான் பெயர். நகை பண்ணுகிற கல்லுக்கும்

30