பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

திருவண்ணாமலை. அதுவும் வீரம் நிறைந்த இடம்; அடல் அருணை என்ன வீரம்? ஞான வீரம் படைத்த இடம் அது. அந்த ஊரில் பல ஞானப் பெரியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நம் கண்ணுக்கு முன்னாலேயே ரமண மகரிஷி அங்கே இருந்தார்.

அவர்கள் தங்கள் பொறிகளை வென்றவர்கள். உடம்பிலே சக்தி உடையவர்கள் எல்லோரையும் வீரம் உடையவர்கள் என்று சொல்ல முடியாது. உள்ளத்திலே தோன்றுகிற காமம் முதலிய ஆறு குணங்களையும் வென்றவர்களே ஞான வீரம் படைத்தவர்கள். ஐம்புலன்களையும் வென்றவர்கள் வீரர்கள். "புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம்" என்று ஒளவையார் சொல்லுகிறார்.

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டை மெய்ப்பொருள் நாயனார் என்ற அரசர் ஆண்டு வந்தார். சிவனடியார்களின் வேடத்தையே மெய்ப்பொருள் என்று அவர் கருதி வந்ததால், அவரை மெய்ப்பொருள் நாயனார் என்று மக்கள் அழைத்தார்கள்.

முத்திநாதன் என்ற அரசன் அவர்பால் பகைமை கொண்டிருந்தான். அவன் பலமுறை முயன்றும் மெய்ப்பொருள் நாயனாரைச் சண்டையில் வெல்ல முடியாது போகவே வஞ்சனையால் அவரைக் கொன்றுவிட எண்ணினான். சிவனடியார் போல உடம்பெல்லாம் திருநீறு பூசி, ருத்திராட்சம் அணிந்து மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனையை அடைந்தான்.

சிவ வேடம் தாங்கி வருபவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்று மெய்ப்பொருள் நாயனார் ஆணையிட்டிருந்ததால், அவன் அவருடைய அரண்மனை அந்தப்புரம் வரை சென்று விட்டான். தத்தன் என்ற காவலாளி அரசன் உறங்குகிறான் என்று சொல்லியும் கேளாமல் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். மெய்ப் பொருள் நாயனார் படுத்திருந்தார். அவர் மனைவி அருகிலே உட்கார்ந்திருந்தாள். சிவவேடம் தாங்கிய முத்திநாதன் உள்ளே நுழைந்தவுடன் மெய்ப்பொருள் நாயனார் எழுந்து பணிந்து நின்றார்.

"சிவபெருமானால் நேரே எனக்குக் கொடுக்கப்பட்ட ஆகமநூல் ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை உனக்கு மாத்திரம் தனிமையில் உபதேசிப்பதற்காக நான் வந்திருக்கிறேன்" என்று அவன் சொல்ல, மெய்ப்பொருள் நாயனார்

36