பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கிருபாகரன்

1

ந்தர் அலங்காரமே மிகப் பெரிய கோயிலைப் போன்றது. சொற்கோயில் அல்லவா? அதன் முகப்பில் விநாயகர் உட்கார்ந்திருக்கிறார். அந்தக் கோயிலை அணுகும்போதே அருணகிரிநாதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டாகிறது.

பலகாலம் வறுமையினால் அல்லற்பட்டுப் பணம் இல்லாமல் தவிக்கின்ற ஒருவனுக்குத் தன் உழைப்பினால் பணம் கிடைத்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. உழைப்பே இல்லாமல் திடீரென்று ஒருவர் இரண்டு லட்சம் ரூபாயை கொடுத்தார் என்றால், அவன் எவ்வளவு ஆனந்தம் அடைவான் அந்த நிதி கொடுத்தவரை எந்த எந்த வகையில் புகழ இயலுமோ அப்படியெல்லாம் புகழ முயல்வான் அல்லவா?

அருணகிரிநாதப் பெருமானும் கோயிலுக்குள் நுழையும் போதே, "கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே கண்டு கொண்டேன்ங என்று உள்ள மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு போகிறார். "இளைய களிற்றைக் காண்பதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆனந்தம்?" என்று கேட்டால், அவர் அதை அடுத்த பாட்டில் சொல்கிறார். "நான் பெரும் பாவியாக இருந்தேன். பற்பல பிறவிகள் எடுத்து உழன்று கொண்டிருந்தேன். எத்தனையோ பெரியார்கள் ஆண்டவனது திருவருளை அடைவதற்குப் பல்லூழி காலம் தவம் செய்திருக்கிறார்கள். நான் எந்தவிதமான தவமும் முன் பிறவிகளில் செய்யவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அதைப் போல, எனக்கு இப்போது முருகன் அருளால், கிடைத்த இன்பம், நான் முன் பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயன் என்று எண்ணக் கூடாது. முன் செய்ததன் பயனாகிய பேறு, பாக்கியம், சற்றும்