பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1


   சிவனைநிகர் பொதியவரை முனிவன்அக மகிழஇரு
   செவிகளிலும் இனியதமிழ் பகர்வோனே"
என்றும் பெரியவர்கள் பாடியிருக்கிறார்கள்.

பெரிய புலவனாக இருந்தால், தான் கற்றுக்கொண்டதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். முருகப்பெருமானிடம் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டு தமிழ் மொழியிலே பெரிய புலவரான அகத்தியர் அழகிய இலக்கணம் ஒன்றைத் தமிழில் வடித்துத் தந்தார். அதற்கு அகத்தியம் என்று பெயர்.

அவ்வாறு அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது இலக்கணப் பிழையோடு பாடலாமா?

அருணகிரிநாதப் பெருமான் நல்ல தமிழ்ப் புலவர். அவர் புகழ்ந்து பாடிய முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அத்தகைய முருகன் மீது நல்ல தமிழ்ப் புலவரால் பாடப் பெற்றப் பாட்டைப் படிக்கின்றவர்களும் தமிழறிவு உடையவராய் அந்தப் பாட்டைப் பிழையின்றிப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?

"முருகனைப் பற்றிய தமிழ்ப் பாட்டை எழுத்துப் பிழை இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்கிறார் அருணை முனிவர்.
   அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியை அன்பால்
   எழுத்துப் பிழைஅறக் கற்கின் றிலி எரிமூண்டதென்ன
   விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்
   கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே?

நாக்குத் திருந்த

அருணகிரிநாதர் மிகவும் சதுரர். "அவர் ஞானி. அவர் ஆண்டவன் அருளைப் பெற்றவர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் நல்ல ஆசிரியர். தமிழை நாம் எல்லோரும் சுத்தமாகப் படிக்க வேண்டும், நாக்கு திருந்த வேண்டுமென்று விரும்புகிறார். மற்ற எழுத்துக்களை சொல்வதைக் காட்டிலும் ழகர றகரங்களை நன்கு உச்சரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால்

72