பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2

இங்கே தொடங்கின முயற்சி அங்கே பலிக்க வேண்டும். அத்தகைய வாழ்வே வாழ்வு. அல்லாதது வாழ்வு அன்று.

"வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய், ஆழாமற் காப்பானை ஏத்தாதே"

என்று மணிவாசகர் பேசுகிறார். நெஞ்சம் தான் நன்றாக வாழ்வதாகவே எண்ணி ஏமாந்து நிற்கிறது. "இது வாழ்வு அன்று; திடீரென்று அற்றுவிடும் கனவு. இந்த வாழ்வு பின்வரும் நீடிய இன்ப வாழ்வுக்கு வேராக, வித்தாக இருக்க வேண்டும். வல்வினைப்பட்டு ஆழாமல் காப்பானை ஏத்துவதே அதற்கு வழி” என்று மணிவாசகர் சொல்வதையே அருணகிரியார், "கோழிக்கொடியன் அடிபணியாமல் வாழ்ந்துவிடலாம் என்று மதிமோசம் போகிறவர்களே!" என்று வேறு வகையில் சொல்கிறார். "கோழிக்கொடியன் அடிபணியுங்கள்; நீங்கள் நன்றாக வாழலாம்" என்ற உபதேச மாகவே அதைக் கொள்ளவேண்டும்.

பின்னும் சில உபதேசங்களை அருணை முனிவர் இந்தப் பாடல்களில் சொல்கிறார். தானமும் தருமமும் செய்து, கோழிக் கொடியன் அடிபணியச் சொன்னவர் மனத்தைப் பண்படுத்தும் வழியையும் சொல்கிறார். மனம்போன போக்கிலே திரிந்து அதற்கு அடிமையாகிவிட்டால் நமக்கு மீட்சி இல்லை. அதன் போக்கிலே முட்டுக்கட்டை போடவேண்டும். வெகுளியைப் போக்க வேண்டும். சிறிதும் சலியாமல், அது வேண்டும்; இது வேண்டும் என்று அலையாமல், 'ஐயோ இது கிடைக்குமா!' என்று ஏங்காமல், இருந்தபடி இருக்க வேண்டும்.

“தடுங்கோள் மனத்தை விடுங்கோள்
வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள்"

என்னும் பொன்னான உபதேசத்தை அருணகிரியார் கூறுகிறார்.

முருகனுடைய திருக்கோலத்தையும், அவனுடைய வீர விளையாடலையும் சொல்லாவிட்டால் இது கந்தருடைய அலங்காரம் ஆகாதே! அவற்றை அங்கங்கே இணைத்து இணைத்துப் பாடுகிறார். அவன் கை ஆறு இரண்டு உடையவன்; சண்முகன்; அவன் திருமார்பில் கடம்ப மலர்மாலை விளங்குகிறது.

6