பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தேடிப் பார்த்து அவளை அழைத்து வருகிறேன் பார் என்று சொல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டாள். மரம் இல்லாத பாலைவனத்தின் வழியே அவள் போய்க் கொண்டிருந்தாள். அப்போது கொஞ்ச தூரத்தில் அவளுக்கு முன்னால் ஒரு பெண்ணும் ஒர் ஆணும் வருவது தெரிந்தது. "நம் மகள்தான் வருகிறாள் போலிருக்கிறதே. அவள் கட்டியிருக்கும் புடவைகூட அதுதான்; அவளே தான்; அந்த ஆடவன்தான் அவள் காதலனோ' என்று நினைத்தாள். "அவர்கள் என் பெண்ணும் அவள் காதலனுமாக இருக்கக்கூடாதா என்ற ஆசை அவள் நெஞ்சில் துடித்தது. பறந்துபோன பறவை திரும்பி வருமா? வேறு யாரோ இரண்டு பேர்கள் ஆணும் பெண்ணுமாக வந்தார்கள். அப்பெண் அவள் பெண்ணைப்போலவே தோற்றினாள். அதே உயரம்; அதே அலங்காரம். பக்கத்தில் வந்து பார்த்தால் வேறாக இருக்கிறது. உடனே மனம் 'பக்' என்றது. அவர்களை இப்படிப் பார்த்து விட்டோமே; அவர்கள் தவறாக எண்ணிக் கொள்வார்களோ என்ற நாணம் உண்டாயிற்று. : உடனே அவர்களிடம், அவர்களை அப்படி எதற்காகப் பார்த்தாள் என்பதைச் சொல்கிறாள். 'உங்களை நான் ஏன் அப்படிப் பார்த்தேன் தெரியுமா? என் பெண்ணும் அவளுடைய காதலனும் என்று எண்ணிப் பார்த் தேன். அவர்களும் இப்படியேதான் இருப்பார்கள். அவர்கள்தாம் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேன்.” 'மீண்டார் எனஉவந் தேன்கண்டு தும்மைஇம் மேதகவே பூண்டார் இருவர்முன் போயினாரோ?” அவர்களைப் பார்த்து, 'நீங்கள் இந்த வழியாகவேதானே வந்தீர்கள்? உங்களுக்கு முன்னே உங்களைப் போலவே இரண்டு பேர் போனார்களா?' என்று கேட்கிறாள். அவர்களுக்கு எதிரே இருவர் போனதுண்டு. அதைச் சொல்ல அந்த ஆடவன் முந்துகிறான். கண்டதைச் சொல்ல வேண்டும் அல்லவா? 'புலியூர் எனைநின்று ஆண்டான் அருவரை யாளியன் னானைக் கண்டேன்.” 31.8