பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 என்று தர்மத்தைச் சொன்னாள். பிறகு "பொருள்தனைப் போற்றி வாழ்' என்று பொருளைச் சொன்னாள். "மெல்லியலார் தோள் சேர் என்று இன்பத்தைச் சொன்னாள். "வீடு பெற நில்' என்று வீட்டு நெறியையும் சொல்லிவிட்டாள். இந்த வகையில்தான் முருகப் பெருமானின் அருள் தானே வந்து நமக்கு வெளிப்பட வேண்டுமாயின், அதற்கான சாதனங்கள் இன்னவென்று சொல்ல வருகிறார் அருணகிரியார். அறத்தைச் சொல்ல வருகிறார். பக்தி என்பது அறத்திலிருந்து வேறுபட்டது அல்ல. தர்மம் இல்லாத பக்தி பக்தி அன்று. தர்மம் இல்லாதது தவமும் அல்ல. அரக்கர் செய்த தவம் அறநினைவு இல்லாத தவம். தவம் முதலியன விசேஷ தர்மங்கள். அன்பு, ஜீவதயை என்பன சாமான்ய தர்மங்கள். அடிப்படையான அறம் - சாமான்ய தர்மம் - இல்லாமல் சிறப்பான அறம் - விசேஷ தர்மம் - பயன் தராது. அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் நிற்குமா? உயர்ந்த தர்மங்களை எல்லாம் செய்யப் போகின்ற ஒருவன் மிகவும் அடிப்படையான தர்மமாகிய அன்பு பாலிப்பதை விட்டு விடலாமா? சூரபன்மன் தவம் செய்தான்; அறிவை வளர்த்தான்; அன்பு இல்லாமல் அறிவு வளர்ந்து கொண்டே போகும் போது என்ன ஆகிறது? அணுக்குண்டு பிறக்கிறது. அன்பு, கருணை, இரக்கம் ஆகிய அடிப்படைக் குணங்கள் இல்லாமல் வளர்ந்து கொண்டே போன அறிவினால் அவன் தன்னைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் துன்பத்தைத் தருகின்ற ஆற்றல் படைத்தான். தர்மம், அன்பு ஆகியவை அவனது தவத்திற்கு ஆதார பீடமாக அமைந்திருந்தால் அவன் அறிவு நன்மையை உண்டாக்கியிருக்கும். இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமானால் அறத்தோடு இணைந்த தவம் செய்ய வேண்டும். அருளுக்கு ஆதார பீடமாக அறத்தை வைத்திருக்கிறார்கள். இறைவனோடு ஒன்றுபட்டு வேறு அல்லாமல் இருக்கிற அருட்சக்தியாகிய அம்பிகைக்குத் தர்மசம்வர்த்தினி என்று பெயர்; அறப் பெருஞ் செல்வி என் பார்கள்: அறம் சிறிதும் இல்லாவிட்டால் அருளைப் பெறுவதற்கு மனிதன் எந்த வகையான முயற்சி செய்தாலும் கிடைக்காது. 52