பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் தேவைக்குமேல் பால் கிடைக்குமானால் மிஞ்சும். மிஞ்சின பாலை அப்படியே வைத்துப் பல நாளுக்குக் காப்பாற்ற முடியாது; புளித்துப் போய்விடும். பால் பயனின்றி வீணாகிறது என்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகிவிட்டால் பால் கறக்கும் ஆர்வம் குறைந்து போகும்; பசுக்களைப் பேணும் உற்சாகமும் போய்விடும். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தேவைக்கு மேல் அதிகமாகக் கோதுமை விளைந்தமையால் அவற்றைக் கப்பலில் எடுத்துப் போய்க் கடலில் கொட்டினார்கள். அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்துவிட்டதாம். காரணம் என்ன? 'சென்ற ஆண்டு கோதுமை விளைவித்தோம். அதைக் கடலில் கொண்டு போய்க் கொட்டினார்கள். எதற்காக இவ்வாண்டு அவ்வளவு உழைக்க வேண்டும்?' என்று பலர் உற்சாகம் குன்றி யிருக்கக் கூடும். அப்படி இல்லாமல் எத்தனை விளைந்தாலும் அதற்குச் சிறந்த விநியோகம் உண்டென்று தெரிந்தால், மேலும் மேலும் விளைச்சல் அதிகமாகிக் கொண்டே வரும். கோதுமை அளவுக்கு மிஞ்சி அமெரிக்காவில் விளைந்தது போல இந்நாட்டில் பால் அதிகம் இருந்தது. இறைவனுக்கு அபிஷேகம் செய்வது உயர்வு என்று சொன்னார்கள். படிப் பால் மிஞ்சியவனும் படிப் பால் அபிஷேகம் செய்தான். குடப் பால் மிஞ்சியவனும் குடப் பால் அபிஷேகம் செய்தான். மேற் கொண்டு இருவரும் பசுக்களைப் பேணி வளர்த்து, பால் அதிகம் கறந்தார்கள். மிஞ்சினால் பின்னும் அதிகப் பயனுள்ள காரியத்துக்குப் பயன்படு கிறது என்ற எண்ணம் இருந்ததே இந்த ஊக்கத்துக்குக் காரணம் 'பால் குறைவாக இருக்கும் காலத்தில் அபிஷேகம் செய்ய வேண்டியது அவசியமில்லையே?’ என்ற கேள்வி எழலாம். ஒரு வழக்கம் இடைவிடாமல் இருந்தால்தான் சமயத்தில் நல்ல பயனைத் தரும். பால் இல்லாத காலத்தில் அபிஷேகத்தை நிறுத்தி விட்டால் மீண்டும் அந்தப் பழக்கம் வருவது எளிதன்று. அதனால் தான் எப்போதும் பால் அபிஷேகம் செய் என்றார்கள். இவ்வளவு பால்தான் அபிஷேகம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தவில்லை. வழக்கத்தை விடாதே என்று மட்டும் சொன்னார்கள். ஒர் உத்தரணிவிட்டாலும் போதும். உலகியலுக்கும் அருளியலுக்கும் ஒத்த பழக்கம் இது. க.சொ.11-7 87