பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 விரிதலும் குவிதலும் கை நீளம் உடையவன் என்று திருட்டுக் குணம் உடைய வனைச் சொல்கிறோம். கை விரிய விரிய உள்ளத்தில் ஆசை விரிகிறது. ஆகையால் முடிவு இல்லாத பிறப்பு இறப்பை உடைய வாழ்க்கை தொடர்ந்து வருகிறது. எத்தனைக்கு எத்தனை ஆசைகளையும் செயல்களையும் விரிவுபடுத்திக் கொள்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை துன்பமும் விரிந்து கொண்டு போகிறது. எத்தனை எத்தனை அவற்றைச் சுருக்கிக் கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை துன்பமும் சுருங்குகிறது. பசு மாடு வைத்துக் கொள்ளவில்லை என்றால் உண்ணி எடுக்கும் வேலை இல்லை. புல் வாங்கிப் போடும் கவலை இல்லை. கொட்டில் அலம்பும் தொல்லை இல்லை. ஆள்காரனைத் தேடும் அவதி இல்லை. இப்படியே ஒவ்வொரு செயலிலும் பார்க்கலாம். 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்' என்கிறார் வள்ளுவர். எந்த எந்தப் பொருளோடு தொடர்பு இல்லாமல் அறுத்துக் கொள்கிறானோ, எந்த எந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்கிறானோ அவ்வவ் வற்றிலிருந்து வருகின்ற துன்பம் அவனுக்கு இல்லை; தாபம் இல்லை. இந்தப் பாட்டை உடன்பாட்டு வாய்பாடாக மாற்றி, 'யாதனின் யாதனின் ஓங்கியான் நோதல் அதனின் அதனின் உளன்' என்று நாம் சொல்லலாம். எந்த எந்தப் பொருளோடு தொடர்பு வைத்துக் கொள்கிறானோ அந்த அந்தப் பொருளினால் துன்பம் உண்டு என்ற கருத்தை அந்தப் பாட்டுக் காட்டும். ஆகவே, கை விரிவதனால் நலம் இல்லை. கை குவிவதனாலே துன்பம் இல்லை. இதை நினைத்துக் கொண்டே, 'தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி" என்றார் மாணிக்கவாசகர். 2CO