பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் நிற்கும். புல் மான் வாயில் போகாமல் அதன் வாயில் தொங்கும். மானுக்கும் புலிக்கும் உயிர் இல்லை என்று சொல்லலாமா? உயிர் இருந்தது. ஆனால் விலங்குணர்ச்சி இல்லை. அவற்றின் செவி வழியாகப் புகுந்த பஞ்சாட்சர கானம் மானின் கோழைத் தன்மையை மாற்றியது; புலியைக் கண்டு அஞ்சாமல் அதன் பக்கத்தில் நிற்கும்படி செய்தது. அப்படியே புலியினிடம் இருந்த புலித்தன்மையும் மாறிவிட்டது; அது, மானைக் கொன்று தின்ன வேண்டுமென்ற உணர்ச்சி இல்லாமல் திறந்த வாயை மூடாமல் நின்றது. பகைமை இழந்த பாம்பு இப்படியே பாம்பு தன் பாம்புத் தன்மையை இழக்கவும், சந்திரன் தன் கோழைத் தன்மையை இழக்கவும் இறைவனுடைய ஜடாபாரத்தில் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் செயல் அடங்கிக் கிடக்கின்றன. நஞ்சு கொப்புளிக்கும் நாகம் அவனுக்கு ஆபரணமாக விளங்குகிறது. 'பாம்புகளைச் செயல் அடங்கச் செய்து அணியாகச் சூட்டிக் கொண்டிருக்கிற பெருமான் இவர். இவருடைய பிள்ளையைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்" என்கிறார் அருணகிரியார். உட்கருத்து L1ாம்பு நஞ்சைக் கக்காமல் அணியாக மாறி இருப்பது போல ஐந்து பொறிகளாகிய படங்களை உடைய நம் மனம் என்னும் பாம்பு நஞ்சைக் கக்காமல் பரமேசுவரர் தாளைச் சார்ந்து அணியாகும் நிலையைப் பெறலாம். அதற்கு இந்தப் பெருமான் உதவி செய்வார் என்பது இதனால் புலனாகிறது. பாம்பு அஞ்சுவதற்குரிய நஞ்சு உடையது ஆனாலும், அதை அடக்கிப் பாம்புத் தன்மையை மாற்றினால் அதுவே அணியாகி விடும். மனம் கெட்டதாக இருந்தால் அதன் விளைவும் கெடுதி யாக இருக்கும். அதை அடக்கி, அதன் கெட்ட தன்மையை மாற்றினால் அதுவே நமக்கு உதவியாக, ஆபரணமாக விளங்கும் என்ற கருத்து இங்கே புலப்படுகிறது. கணபணக்கட் செவியால் பணியணி கோமான் மகனை. 211