பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை) முருகப் பெருமானுடைய திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசையில் பன்னிரண்டாம் புத்தகமாகிய இது இப்போது வெளியாகிறது. பதினோராம் புத்தகம் வெளியாகிக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. பல வேலைகளுக்கிடையே செய்ய வேண்டியிருந்தமையாலும்; இயல்பாக எனக்கு உள்ள சோம்பலினாலும் இந்த மலர் வெளியாக இவ்வளவு தாமதமாகி விட்டது. இனியேனும் ஏனைய புத்தகங்களை வெளியிட முயல்வேன். இந்தப் புத்தகத்தில் அறுபதாவது பாடல் முதல் அறுபத் தைந்தாவது பாடல் வரையில் உள்ள ஆறு பாடல்களுக்குரிய விரிவுரைகள் உள்ளன. நம்முடைய மன நோயையும் உடம்பு நோயையும் போக்கும் வழியை எதிர்மறை உருவத்தில் அருணகிரி வள்ளல் புலப் படுத்தும் பாட்டின் விரிவுரையே இதில் உள்ள தண்டைச் சிற்றடி என்னும் முதல் கட்டுரை. இறைவனிடம் ஈடுபடும் முறைகள் எவ்வாறு அடுத்தடுத்து நிகழ்கின்றன என்பதை இதில் காணலாம். 'வேலவன் போதித்த ஞானம்' என்ற இரண்டாவது சொற்பொழிவு ஞானம் பெற்றவர் அடையும் அநுபவ நிலையை உணர்த்துவது. முருகனுடைய தந்தைக்கும் மாமனுக்கும் உரிய அணிகலங் களைக் கூறிப் பிறகு, அவனுடைய திருவடிக்கும் வேலுக்கும் உரிய அணிகலன்களை அடுத்த பாட்டின் விளக்கத்தால் தெரிந்து கொள்ளலாம். சோதனையும் சாதனையும் என்பது அருணகிரியார் தாம் இறைவனை அன்பு கொண்டு வழிபட்டுச் சோதித்து வெற்றி பெற்ற பெருமிதத்தில் பாடும் பாட்டின் விளக்கம். போதித்த மெய்யன்பினால் அழுது தொழுதுருகிச் சாதித்துக் கொண்ட சாதனையை அப்பாட்டில் கூறுகிறார்.