பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பதைக் கேட்டும் கற்றும் செய்தி அளவில் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம் நாம். விலங்குகளுக்கு அதுகூடத் தெரியாது. அந்த அளவுக்கு நாம் பாக்கியசாலிகள். ஆனால் மூளையில் ஏற்றுமதி செய்து கொண்ட வெறும் செய்தியாக இல்லாமல் இதயத்தில் ஏற்றுமதி செய்து கொண்ட உணர்ச்சியாக மாறி, பின்பு ஆன்மாவில் ஏற்றுமதி செய்கிற அநுபவமாக விளைய வேண்டும். அதற்குத் துணையாக இருப் பது அறிவுதான். ஆனால் அறிவோடு நின்றுவிடுவதால் அநுபவம் புலப்படாது. அறிவுக்கு மேலே உணர்ச்சி வரவேண்டும். "பார்க்குமிடமெங்கும்ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே” என்று அநுபவிக்கின்ற நிலை வரும்போது எம்பெருமானுக்குள் எல்லாம் மறைந்துபோகும். இதற்கு ஆரம்பம், எல்லாம் அவன் உருவாகக் காணவேண்டும் என்ற ஆசையும் அப்படிக் காண்பதற் குரிய முயற்சியுந்தான். ஏதேனும் ஒரு பொருளின்பால் நமக்கு அதிகமான ஆசை இருக்குமானால் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அந்தப் பொருளோடு நம்முடைய மனத்திலுள்ள ஆசைப்பொருளையும் தொடர்புபடுத்திப் பார்க்கிற நிலை உண்டாகும். புதிதாகத் திருமணம் பண்ணிக்கொண்ட பெண்ணுக்கு எந்தப் பொருளைப் பார்த்தாலும் தன் கணவனோடு தொடர்புபடுத்த நினைக்கிற நிலை உண்டாகும். பார்க்கிற பொருள், தோழி வாயிலாகக் கேட்கிற செய்தி எல்லாவற்றையும் அவள் தன் நாயகனோடு தொடர்புபடுத்திப் பார்க்க முயல்வாள். இதற்குக் காரணமாக இருப்பது அவள் நெஞ்சில் உள்ள காதல். அதுபோல் இறைவனிடத்தில் உண்மையான பக்தி உண்டானால் உலகத்தி லுள்ள பொருள் எல்லாவற்றோடும் அவனைத் தொடர்பு படுத்திப் பார்ப்போம். இறைவனுடைய நினைப்பும், உலகப் பொருளைக் காணும் காட்சியும் சேர்ந்து சேர்ந்து வந்து பிறகு காதல் முறுகிவிட்டால் அந்தக் காட்சி மறைந்து இறைவன் நினைவே காட்சியாக மாறிவிடும். கடைசியில் இறைவனை யன்றிப் பிறிதொன்றையும் பாராத நிலை வந்து விடும். அதுதான் சிவயோகம் என்று தம் அநுபவத்தால் தெரிந்து கொண்டார் அருணகிரியார். 171