பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நதிக்குக் கரையிருக்கும். ஆனால் அது எங்கே இருக்கிறதென்று தெரிந்தால்தான் அதனைப் போய்ச் சேரலாம். தெரிந்தாலும் போதாது, முயற்சி பண்ணி அதை அடைய வேண்டும். அவனோ இருட்டில் இருக்கிறான். வெள்ளத்தில் மிதக்கிறான். போதாக் குறைக்குப் பெரும் மூட்டை அமிழ்த்துகிறது. முன் பின் போய்ப் பழகின ஆறாக இருந்தாலும், பழக்கத்தால் இன்ன இடத்தில் இருக்கிறோம் என்ற நினைவு இருக்கும். இதுவரைக் கும் போகாத இடம் அது. இப்போது அவன் என்ன செய்வான், 'நான் எங்கே போய்க் கரை ஏறுவது என்று தெரியவில்லையே! கரை என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தோன்ற வில்லையே!' என்று கதறுகிறான். அந்த நிலையில் இருப்பவன் சொல்வதுபோல அருணகிரியார் இந்தப் பாட்டைப் பாடுகிறார். நதிதனை அன்ன வாழ்வு நம்முடைய வாழ்வு பொய்யான வாழ்வு. பொய் என்பதற்கு இரண்டு பொருள உண்டு. உண்மை அல்லாதது, நிலையில்லாதது ஆகிய இரண்டையும் பொய் என்றே சொல்வார்கள். வடமொழி யில் மித்யை என்பதும் அதுதான். இந்த வாழ்வு நெடுங்காலம் நிலையாக நிற்பது அன்று. கணத்திற்குக் கணம் மாறுகிறது. ஒரே வகையான அநுபவமும், ஒரே வகையான செயல்களும் நமக்கு இருப்பது இல்லை. காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், சார்புக்குச் சார்பு இவை மாறுகின்றன. ஆற்றில் தண்ணிர் போய்க்கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரே அளவாகத் தண்ணீர் இருப்பது இல்லை. ஒரு கணம் பார்த்த தண்ணீர் அடுத்த கணத்தில் இருப்பது இல்லை. அது நெடுந்துரம் போய்விடுகிறது. ஆனால் பொதுவாகப் பார்ப்பதற்கு நதியில் எப்போதும் ஒரே தண்ணீர் இருப்பது போலத் தோன்றுகிறது. ஏரியிலும், குளத்திலும் இருக்கும் தண்ணீர் அப்படி அப்படியே தேங்கி நிற்கிறது. ஆனால் ஆற்றில் இருக்கும் தண்ணீரோ அப்படியே இருப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தண்ணீர் அடுத்த கணத்தில் வேறு இடத்திற்குப் போய் விடுகிறது. 3ΟΟ