பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்று சொன்னார். பற்று இல்லாமல் வாழ்கிறவர்களுக்குப் பற்றைப் பற்றிக் கவலை இல்லை. நாள்தோறும் பற்றுக்களைப் பெருக்கிக் கொண்டு தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் மனத்தைப் பதித்து ஒன்றிலிருந்தும் பிரிய முடியாது வாழ்கின்ற நமக்கு அந்த நிலையினின்றும் மீள்வதற்கு வழி ஒன்றே ஒன்று தான். அது இறைவனைப் பற்றிக் கொள்வது. ஆகையால் அருணகிரிநாதர், 'இருதலைக் கொள்ளி எறும்பு போல இருக்கும் என்னை நீ வந்து காப்பாற்ற வேண்டும்; என் உள்ளத் துயரத்தை நீக்க வேண்டும்' என்று இறைவனைப் பற்றிக் கொண்டு வேண்டுகிறார். கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன உள்ளத் துயரை ஒழித்தருள்வாய் திருச்செங்துர் இந்த விண்ணப்பத்தை அவர் திருச்செந்தூரில் உள்ள எம்பெருமானிடத்தில் சமர்ப்பிக்கிறார். திருச்செந்துரை எண்ணும் போது அதன் கடற்கரை நினைவுக்கு வருகிறது. எப்போதும் அலை மோதுகின்ற கடற்கரையில் செந்தில் ஆண்டவன் எழுந் தருளியிருக்கிறான். அந்த ஊருக்கே அலைவாய் என்று பெயர். அங்குள்ள கடற்கரை அழகியது. முத்துக்களை அலைகள் கொண்டு வந்து கொழிக்கின்றன. கோடிக்கணக்கான முத்தங்களை அங்கே கொண்டு வந்து சேர்க்கின்றன. திருச்செந்தூரில் எம்பெருமானுடைய சந்நிதானத்தில் நின்ற அருணகிரிநாதப் பெருமானுக்கு இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது. ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே! வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே! எம்பெருமான் வீரனாக வேலாயுதத்தைக் கையில் வைத்திருக் கிறான். சூரபன்மனைச் சங்காரம் செய்வதற்காகத் திருச்செந்தூரி லிருந்து வீரவாகு தேவரைத் தூது அனுப்பினான். அங்கே 429