பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படிதந் ததுசொல் லுமதோ விடும் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமும் கமழும் கழலே' என்று குறத்திக்காக அலைந்த அந்தத் திருப்பாதம் தம்முடைய தலையின் மேலே சூடுவதற்கு உரியதாக வந்தது என்று அருண கிரியார் கந்தர் அநுபூதியில் சொல்கிறார். இவ்வளவு எளிதான வழி ஒன்று இருக்கும்போது அரியவற்றுள் எல்லாம் அரிதான யோக நெறியில் சென்று மாட்டிக் கொண்டு ஏன் வாடவேண்டுமென்பதே அருணகிரியாருடைய கருத்து. 大 காட்டில் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின் வீட்டில் புகுதல் மிகஎளி தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேர்அண்ட மூச்சைஉள்ளே ஒட்டிப் பிடித்துளங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே. (காட்டிலே வாழ்ந்த குறத்தியாகிய வள்ளி நாயகியின் மணாளனாகிய முருகனுடைய திருவடியில் உள்ளத்தைச் செலுத்தி அன்பு செய்தால் பேரின்ப வீடாகிய முத்தியிலே புகுவது மிகவும் எளிய செயல்; விழிப்பார்வையை மூக்கு நுனியிலே வைத்து, மூலாக்கினியை மூட்டி மூச்சைக் கபாலத்துக்கும் மூலாதாரத்துக்கும் உள்ள நேரான வழியில் செல்ல உள்ளே பூரித்துப் பிறகு கும்பித்து எங்கும் ஓடாமல் யோகசாதனம் செய்யும் யோகிகளே! பிரான் - இங்கே தலைவன். புகட்டுதல் - செலுத்துதல். விழி: ஆகுபெயர்: பார்வையைக் குறித்தது. நாசி - நாசி நுனி. மூட்டி - மூலாதாரத்திலுள்ள தீயை எழுப்பி, கபால மூலாதாரம் நேர் - கபாலம் மூலாதாரம் என்ற இரண்டுக்கும் தொடர்பாக நேரே உள்ள சுழுமுனை நாடி. அண்ட - அதன்வழியே செல்ல. மூட்டி, மூச்சை நேர் அண்ட ஒட்டி என்க. ஒட்டி - சுழும்னா நாடியில் ஒடச் செய்து. பிடித்து - கும்பித்து: மூச்சை நிறுத்தி, யோகிகளே, புகட்டின் எளிது என்று முடிவு செய்க.) இது கந்தர் அலங்காரத்தில் 85-ஆவது பாட்டு. 84