உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுரர்களின் தோற்றம் வீரவாகு தேவர் பக்கத்தில் வாளை ஏந்திக்கொண்டு நிற்க, மற்றத் தம்பிமார்கள் எட்டுப் பேர்களும் லட்சம் வீரர்களும் சூழ்ந்து கொண்டு நிற்க, முருகப் பெருமான் இரத்தின சிம்மாசனத்தில் எழுந் தருளி இருந்தான். அப்போது அவன் இந்திரனைப் பார்த்து ஒன்றும் தெரியாதவன் போல, "சூரன் முதலியவர்களுடைய வரலாற்றைச் சொல்வாயாக" என்று கேட்டான். இந்திரன், தேவகுருவான வியாழபகவானிடம், "நீங்கள் சொல்லுங்கள் ” என்று சொன்னான். வியாழன் சொல்லத் தொடங்குதல் முருகப் பெருமான் ஒன்றும் அறியாதவனைப் போலப் பிருகஸ்பதி சொல்லத் தொடங்கிய அசுரகுல வரலாற்றைக் கேட்கலானான். இதைக் கொண்டு முருகன் அறியாமல் கேட்கிறான் என்று எண்ணக் கூடாது. ஒரு தாய் கணிதத்தில் மிகவும் கெட்டிக்காரி; எம்.எஸ்.ஸி. படித்துத் தேர்ச்சி பெற்றவள். தன் சின்னக் குழந்தையிடம் நாலும் நாலும் என்ன என்று கேட்கிறாள். அவளுக்குத் தெரியாமல் கேட் கிறாள் என்றா சொல்வது? பூகோள வாத்தியார் படிக்கிற பையனைப் பார்த்து, "லண்டன் எங்கே இருக்கிறது?" என்று கேட்கிறார்: " இவ்வளவு படித்த உங் களுக்கு லண்டன் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே !" என்று பையன் கேட்கலாமா? இத்தகைய வினாக்களை அறிவினா என்று இலக்கணம் சொல்லும். முன்பே இதைப்பற்றிச் சொல்லி யிருக்கிறேன். அசுரகுல வரலாற்றைச் சொல்லச் சொன்னவுடன் வியாழபகவான் மிகுந்த அடக்கத்துடன் தொடங்கினார் "எம்பெருமானே, நீ எல்லாப் பொருள்களையும் நன்றாக அறிவாய். எல்லா உயிர்களிடத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறாய். எங்களுடைய துன்பத்தை நீக்குவதற்காக நீ குழந்தை உருக்கொண்டு வந்திருக்கிறாயே அன்றி, உன்னுடைய இயல்பினை அறிந்தவர்கள் யார்?"