260 கந்தவேள் கதையமுதம் நம்முடைய நாட்டுப் பெரியவர்கள் காலத்தை வீணே போக்கிக் கழிக்காமல் இறைவனை வழிபடுவதில் கழித்து வந்தார்கள். அப்போதெல்லாம் இப்போதுபோல அதிக வேலை இருப்பதில்லை. இப்போதோ உபயோகம் இல்லாத பல வேலைகளை பண்ணு கிறோம். ஆகையால் நேரம் இல்லையென்று சொல்லிக்கொண்டிருக் கிறோம். பழங்காலத்தில் ஓய்வு நிறைய இருக்கும். உழைக்கும் போது அதிகமாக உழைப்பார்கள். ஓய்வு பெறும்போது நன்றாக ஓய்வு எடுப்பார்கள், இப்போது மேல்நாட்டில்தான் அப்படிச் செய்கிறார்கள். இந்த நாட்டில் ஓய்வு எடுப்பது என்பது இறை வனைக் கும்பிடுவதுதான். இந்திரன் சீகாழியில் சும்மா இருக்க விரும்பாமல் நந்தனவனம் வைத்தான். அதிலிருந்து மலர்களைப் பறித்து இறைவனுக்கு வழி பாடு செய்தான். இந்திரனைத் தேடி. அசுரர்கள் பூவுலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் வருவதை அறிந்த இந்திரனும், இந்திராணி யும் ஒரு மூங்கிலுக்குள் ஒளிந்துகொண்டார்கள். இந்திரபோகம் எங்கே? மூங்கிலுக்குள் சிறைப்படும் வாழ்வு எங்கே? சிவனை மதி யாமல் தக்கயாகத்தில் கலந்துகொண்ட பாவத்தினால் வந்த வினை அது. சிவாபராதம் செய்தவர்கள் அதன் பயனை அனுபவிப்பார்கள். மழை வறத்தல் அசுரர்கள் சூரனிடம் சென்று, "இந்திரனைப் பூவுலகத்திலும் காணவில்லை; சீகாழியிலும் தேடிப் பார்த்தோம்; கிடைக்கவில்லை" என்றார்கள். இந்திரன் வைத்த நந்தனவனம் இருக்கிறது; இந்திர னைக் காணவில்லை என்பதைக் கேட்டுச் சூரனுக்குக் கோபம் உண்டாயிற்று. மேகங்களுக்கு ஆணையிட்டு மழை பெய்யாமல் தடுத் தான். சூரன் இயற்கையையே மாற்றுகிற ஆணை பெற்றவன். மழை இல்லாதபோது மழையை வருவிப்பது நல்லவர்கள் வேலை. மழை இருக்கும்போது மழையைத் தடுப்பது பொல்லாதவர்கள் வேலை. இயற்கையான ஆற்றல்களை எல்லாம் தடுத்துத் துன்பப் படுத்துவது அசுரத் தன்மை. சூரபன்மன் மழை பெய்யக் கூடாது என்று தடுத்தான். மழை இல்லாததால் எங்கும் நீர் இல்லை. இந்திரன் வைத்த நந்தனவனம் வாடத் தொடங்கியது. அதைக் கண்டு இந்திரன் உள்ளம் வாடியது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/270
Appearance