தேவாசுரப் போர் 403 பெரும்பாலும் பிறகு அதைச் செய்ய வேண்டுமே என்று கவலைப் படுவதில்லை. இது சாமானிய மக்கள் நிலை. எவன் சொன்னபடி செய்கிறானோ அவன் உத்தமமானவன். ஒருவன் ஒரு தோட்டத்திற்குச் சென்றான். அங்கே பாதிரி, மா, பலா ஆகிய மரங்கள் இருந்தன. பாதிரி மரத்தைப் பார்த்தான். அது நிறையப் பூப் பூத்திருந்தது. அந்தப் பூக்களைப் பார்த்தவுடன் அவை எல்லாம் காயாகும் என்று நினைத்தான். பல நாட்கள் அதைத் தொடர்ந்து பார்த்தான். அது பூப்பதும், பூத்த பூக்களை எல்லாம் உதிர்ப்பதுமாகவே இருந்தது. காய் காய்க்கவில்லை. மா மரத்தைப் பார்த்தான். அதில் பூக்களும் இருந்தன. காயும் காய்த்திருந்தது. பலா மரத்தைப் பார்த்தான். பூவே இல்லை. 'இது எங்கே காய்க்கப் போகிறது, பழுக்கப் போகிறது?" என்று எண்ணியிருந்தான். ஆனால் குலைகுலையாக அது காய்த்துத் தொங்கியது. ஒளவைப் பாட்டியிடம்,"பாட்டி, இந்த அதிசயத்தைப் பார்த்தாயா?"என்றான். பாட்டி அதைப் பார்த்துச் சொன்னாள்; "அப்பா, உலகத்தில் சொல் பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். சொல்கிறபடி செய்கிறவர்கள் சில பேர்தாம். சொல்லாமலே செய்கிறவர் மிகச் சில பேர். சொல்லாமல் செய்கிறவர்கள் உத்தமர்கள். பூக்காமலே காய்க்கும் பலாமரத்தைப் போன்றவர்கள் அவர்கள். பூத்துக் காய்க்கின்ற மாமரத்தைப் போன்றவர்கள், சொல்லிச் செய்கிறவர்கள், இவர்கள் மத்திம மானவர்கள். சொல்லியும் செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பாதிரி மரத்தைப் போன்றவர்கள்; மிகவும் தாழ்ந்தவர்கள்" என்றாள். - www "சொல்லாம லேபெரியர்; சொல்லிச்செய் வார்சிறியர்; சொல்லியும் செய்யார் கயவரே; நல்ல குலாமாலை வேற்கண்ணாய்,கூறுவமை நாடின் பலாமாவைப் பாதிரியைப் பார்." ஆகவே, சொல்லியபடி, எண்ணிய எண்ணத்தின்படி, செயல் படுகிறவன் எவனோ அவன்தான் திண்மையான மனம் உடையவன். நாம் இன்ன செய்ய வேண்டும் என்ற கொள்கை மனத்தில் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நமக்குக் கருவி கரணங்கள் இருந்தாலும், எதைச் செய்ய வேண்டுமென்ற திடமான கொள்கை இருந்தால் தான் அத்தனையும் பயன்படும்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/423
Appearance