பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அந்த மரத்தடியில் நிற்கிறேன்;
        இன்று நேற்றல்ல..
எத்தனையோ நாட்களாக.

நீ போகும்போதும் வரும்போதும்
உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும்
என்ற பசியால்
நின்று கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும்
என்னைப் பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய்.

என்றாவது ஒரு நாள்
என் அருகே வர மாட்டாயா
என்று காத்திருக்கிறேன்.

ஒரு நாள், உண்மையிலேயே
என் அருகே வருகிறாய்;
என் மணிக்கட்டைப் பற்றுகிறாய்;
என் தோளைத் தொடுகிறாய்;

என் காலைச் சுற்றிக்
கங்கை பாய்வதைப் போலவும்
என் மேனியெங்கும்
கோடிப்பூக்கள்
மலர்வதைப் போலவும்
நான் சிலிர்க்கிறேன்.

என் சிலிர்ப்பைப் புரிந்து கொண்ட நீ
"சிலை என்று நினைத்துத் தொட்டேன்.
ஓ... உயிர் இருக்கிறதா?” என்கிறாய்.

 

57