உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  7



8.
ஏற்றஞ்சேர் பாட்டு வேண்டும் ஏர்ப்பாட்டு தமிழில் வேண்டும்
ஆற்றினில் படகுய்ப் பார்க்கு மணிதமிழ் வேண்டுந் தென்றற்
காற்றெலாந் தமிழ்ம ணந்து களிதரல் வேண்டும்; பாடற்
சோற்றினைப் படையல் செய்தேன்; சோர்வற நீக்கு வாயே!
9.
ஐயத்தைப் போக்கி மக்கள் ஆர்வத்தை ஊக்கி வைக்கத்
தையலைப் போற்று கின்றேன் தனித்தமிழ்த் தாயுன் னோடு
மெய்யுற வாக நிற்கும் மென்றமிழ்ப் பித்தன் என்னைக்
கையற வேண்டாம் அம்மா காத்தெனை ஊக்கு வாயே!
10.
ஒருகையிற் குறளு மற்று மொருகையி லடியு மேந்தி
மருங்கினில் மணியுங் காலில் மருவறு சிலம்பும் பூண்டு
கருங்குழற் காட்டிற் ‘சங்க’க் கவின் பெரு நூலாய்க் காட்சி
தருந்தனித் தாயே! என்னைத் தளர்விலா தணைப்பாய் நீயே!
11.
ஓடுகைக் கொண்டோ ருன்னை வழுத்துவ ரென்னில் சங்க
ஏடுகைக் கொண்டோ ரெல்லா மேத்து வரன்றோ நல்ல
பாடுகைக் கொண்டார் வாழ்வர்; பைந்தமி ழன்னா யுன்னை
நாடுகைக் கொண்டோன் மட்டும் நலிவதோ? சொல்வா யம்மா!
12.
ஒளவியஞ் சொல்வார் வாழ்ந்தும், அறிவிலார், கல்லார்
(வாழ்ந்தும்
வௌவுதல் செய்வார் தீய வஞ்சகர் வாழ்ந்தும், வாழா
திவ்விடுக் கண்பட் டுள்ளோ னின்பத்தைக் காணா தெல்லாந்
தவ்வையின் கொடுமை யில்லை; தனித்தமிழ்க் கொடுமை
(யன்றோ!
13.
கவின்பெறு தமிழே! என்னைக் காக்கின்ற அருளே! இன்பம்
குவிந்தநற் பொருளே! எண்ணக் குன்றமே! இடுக்கண் கண்டால்
அவிழ்கின்ற உடுக்கைக் காற்றுங் கையென விரைநீ யென்று
நவில்மறை யுடையா யானால் நாவலர்ப் போற்றாய் வாழி!
14.
காமலர்க் கள்ளே! கண்ணின் கருமையே! கனியின் சாறே!
பாமலர் அளித்தோ னெண்ணப் பரவையே! தீயோர் வாழ
நாமலர்ந் துன்னைப் போற்றும் நல்லவற் பேணா ளாகிப்
பூமலர் வாயடைத்தாய்; புரைதுயர் நீக்காய் வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/34&oldid=1418379" இலிருந்து மீள்விக்கப்பட்டது