பக்கம்:கனிச்சாறு 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 கனிச்சாறு – முதல் தொகுதி



3  தமிழ்த்தாய் அறுபது



1. அந்தமிழ் நாட்டில் தோன்றி ஆன்றோருக் கின்பங் காட்டிச்
செந்தமிழ்க் கழகம் ஊர்ந்து சிறப்பாய நூல்க ளாக்கி
வந்தனை யன்றோ உன்னை வாழ்த்தாத நாவென் நாவோ?
எந்துயர் கண்டாய்; வந்தெம் இடரினைக் களைவாய் நீயே.

2.ஆவதை யாக்கி னோருள் அனையுனைப் போற்றார் யாரோ?
காவதி நாட்டை யண்டிக் கனிதமிழ் கல்லார் யாரோ?
நாவதி ராற வுன்றன் நற்றமிழ் பாடார் யாரோ?
ஈவதி லுன்னை விட்டே யெங்கணிற் காண்பார் யாரே?

3.இத்தரை தமிழ்நா டென்றே எப்பொழு தார்ப்பேன் நீர்சூழ்
இத்தரை குறள்நா டென்றே யார்சொலக் கேட்பேன் இந்திப்
பித்தரின் வாயிலும்நற் றமிழாடும் நாளென் நாளோ?
குத்தல்சேர் வறுமை நீக்கிக் குறைபோக்கெந் தமிழின்தாயே!

4.ஈயார்நற் றமிழைக் கேட்டே ஈயுநா ளெந்த நாளோ?
தீயார்செந் தமிழால் உள்ளம் திருந்துநா ளெந்த நாளோ?
வாயாரத் தமிழால் மக்கள் வாழ்த்துநா ளெந்த நாளோ?
சேயானை அன்னாய் நீயே சிறப்பிக்கு நாளெந் நாளோ?

5.உன்றனைப் பாடா ரெல்லாம் ஊமைய ரன்றோ வாழ்வில்
செந்தமிழ் படியா ரெல்லாஞ் சீர்பெறா ரன்றோ மண்மே
லுன்றனைப் பேணார் எல்லாம் உளமிலார் அன்றோ உள்ளம்
வந்துனைப் போற்று கின்றேன் வகைசெய்வாய் தீமை போக்கி!

6.ஊமையர் தமிழைப் பாடி உருப்பெறல் வேண்டுந் தீய
காமியர் தமிழால் நெஞ்சங் கரைந்துய வேண்டும் வாழ்வின்
தீமையர் உன்னைப் போற்றித் திருந்திய ராகல் வேண்டும்
நேர்மையி லின்னல் வாழ்வை நீந்தும்நா ளெந்த நாளோ?

7.எவ்வினைத் தமிழைக் காக்க என்றறிந் திருப்பார் யாரும்
அவ்வினை யாக்க முன்றில் ஆர்த்திட வேண்டும் அம்மா!
செவ்வினை யாக்கி யென்றன் செந்தமிழ்த் தாயைப் போற்றி
இவ்வுல கெல்லாம் வாழ்ந்தே இன்புறும் நாளென் நாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/33&oldid=1419346" இலிருந்து மீள்விக்கப்பட்டது