இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
3. இயற் பத்து
1.நிற்றல் நிலைமாறல் நீடிசைத்தல் ஆடலெனக்
கற்றல் ஒடுங்கல் இயல்.
2.ஊன்றல் உணர்தல் ஒளியேற உள்ளாடி
ஆன்றல் அவிதல் இயல்.
3.பிணைதல் பிளத்தல் பிறந்திசைந்தே ஆடி
இணைதல் புதைதல் இயல்.
4.தோன்றல் துலங்கலொரு துண்ணணுவாய் மின்னியுளம்
நோன்றல் நுடங்கல் இயல்.
5.ஏறல் இளைந்தொளிர்தல் எண்ணிறந்து மாறியுயிர்
ஆறல் அடங்கல் இயல்.
6.பிறங்கல் புலனுயர்தல் பீடுணர்வால் ஆழ்ந்துள்
உறங்கல் ஒடுங்கல் இயல்.
7.பொங்கல் புணர்தல் பொதியுடம்பு விட்டவுயிர்
தொங்கல் துதைதல் இயல்.
8.சோம்பல் சுடர்தல் சுரப்பித்தல் உள் நிறைந்து
கூம்பல் குமைதல் இயல்.
9.விசைந்தேறி உள்விளங்கி விண்டவுயிர் சோர
இசைந்தாடி ஒன்றல் இயல்.
10.எடுத்தல் இயங்கல் இசைந்தாடி உள்ளம்
படுத்தல் மடுத்தல் இயல்.
- 1957