பக்கம்:கனிச்சாறு 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கனிச்சாறு – முதல் தொகுதி

வித்தூன்றி வைத்தால் விளைவாகும் நன்னிலங்கள்!
முத்தெறியும் வீங்குகடல்! மூண்ட மணிப்புதையல்!
பொன்னும் இரும்பும் புகைக்கரியும் வேரோடி
மன்னும் பெருஞ்சுருங்கை! மாயாப் பெருவிளைவு!
கன்னல் குறைவா? கனிமரங்கள் தாங்குறைவா?
பின்னிக் கிடக்கும் பெருங்காடு ஒன்றிரண்டா?

ஆனை உதைத்தும் முடியிலையும் ஆடாத
வானை அணைத்த வளர்மரங்கள் கொஞ்சமா?
காளை உழுதாலோ கால்விளைவா காதென்றே
கூளி மதயானை கொண்டே உழத்தக்க
நல்வயல்கள் எண்கோடி! நாற்றங்கால் பல்கோடி!
சொல்விளைவும் தோற்றுப்போம் நெல்விளைவு கண்டோமே!
இத்துணையாய்ப் பல்வளங்கள் இங்கிருந்தும் செந்தமிழர்
செத்தழிந்து போவதென்ன? சீர்குன்றிப் போவதென்ன?
கிள்ளைஅடை முட்டை கடும்பாம் பயின்றதுபோல்
கொள்ளை யடிக்கின்றார் கொடுவடவர்! கண்டோமா?
ஆழநினைத் தின்றே அவர் விளைவை வெட்டொன்றில்
வீழக் கிடத்தி விறல்சூட வேண்டாமோ?

நாட்டைப் புதுக்கி, நகர்புதுக்கி நாம் வாழும்
வீட்டைப் புதுக்கி வினைபுதுக்க வேண்டாமோ?
கற்றுப் பெரும்பயனைக் கண்டவரார்? கல்லாரும்
உற்றபயன் என்னை? உழவரெல்லாம் என்னகண்டார்?
ஊர்ப்பெயரை மாற்றும் உரிமைக்கும் வானொலியின்
பேர்புதுக்கும் நல்லுரிமைப் பேச்சுக்கும் இல்லையெனின்
எற்றுக் கமைச்சரெலாம் இங்கிருக்க வேண்டுமவர்
ஒற்றுக்குத் தாளம் உரக்கவே போடுதற்கா?

இஃதெல்லாம் எண்ணில் இமைமூட மாட்டுதில்லை!
எஃகுடலும் கூனியே ஈரடியாய் நாணின்றால்!
ஆன்ற தமிழ்மறவீர் ஆதலினால் கூவுகிறேன்.
ஊன்றீர் தமிழ்க்கொடியை! ஊரைத் திரட்டுவமே!
உண்ணில் தமிழ்த்தாய் உயர்கொடிக்கீழ் இந்நாட்டு
மண்ணில் விளைந்த விளைவுண்போம்! மானம்போய்ச்
செத்தழிந்து போமுன்னே சீர்விளங்கப் பேர்விளங்க
முத்தமிழைக் காப்போம் முனைந்து!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/53&oldid=1419317" இலிருந்து மீள்விக்கப்பட்டது