32 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
16 தமிழில் வடசொற்கள்
மொழியறிவு துளியுமிலாக் குழுவின் பாலே
முத்தமிழை ஒப்படைத்தே, ஆராய்ந்தின்னும்,
வழிவகைகள் செய்திதனைத் தமிழாட்சிக்கு
வணங்குகின்ற மொழியாகச் செய்வீரென்று
பழிவாங்கிக் கொண்டார் இந் நாட்டை ஆள்வார்!
பைந்தமிழ்க்குத் தீங்கு செய்தார்; நஞ்சைச் சேர்த்தார்!
விழியற்ற அறுவர்போய் யானைகண்ட
வினைதவிர வேறென்ன? உணர்வீர் நன்றே!
சந்தோஷம் என்பதற்கு 'ஷ' வேண்டுமாம்;
ஜனநாயகத்திற்கு 'ஜ' தேவையாம்;
சிந்தித்துப் 'புஸ்தகத்' தை 'அக்ஷரத்'தைச்
சொல்லுங்கால் ‘ஸ' வேண்டுமாம் 'க்ஷ'வும் வேண்டும்!
இந்தவெழுத் தெல்லாம்நம் தமிழில் சேர்ந்தால்,
இந்நாட்டைத் தமிழ்ஆளத் தகுதி யாகும்!
‘விந்தை’ யல்ல! ஆராய்ச்சி! மொழியாராய்ச்சி!
வெள்ளெலும்பு கண்டார், வெள் ளெலும்பே கண்டார்!
குழுமுடிவைக் கேட்டிருந்த அமைச்ச ரெல்லாம்
‘கோணல் முடிவல்ல' 'நல்ல முடிவே' என்றார்!
எழுமுடிவு வேறென்ன? அமைச்ச ரென்றால்
எழுத்துப்பற்றி ஆராய்ச்சி எதற்கு வேண்டும்?
குழுமுடிவோ? யார் முடிவோ? அமைச்சர்க் கெல்லாம்
கொண்ட முடிவே முடிவு! நம்மனோர்க்குக்
கழுநீரா ஓடுவது உடலில்! தீங்கைக்
கண்ட பின்னும் பிணம்போல இருப்பதற்கே!
‘மகிழ்ச்சி' எனும் சொல்லிருக்கச் 'சந்தோஷம்' ஏன்?
மக்களர சிருக்க ‘ஜனநாயக' மிங்கேன்?
புகழ்ச்சி பெறும் 'நூல்' இருக்க 'புஸ்தக 'மிங்கேன்?
(புத்தகமும் தமிழ்ச்சொல்லே! போந்து மூலம்)
இகழ்ச்சிதரும் 'அக்ஷர'மேன் 'எழுத்’ திருக்க!
‘இழிமலடி' வெறுவயிறி வடவர் மூளி
புகழ்ச்சிபெறும் மங்கைக்குத் தருமாம் பிள்ளை:
பைந்தமிழ்த்தாய்க் காணையிட்டு நிற்பீர் மக்காள்!
-1960