40 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
ஆங்கப் பொழுதே மொழியலைத்தார்; ஆரியத்தால்
தேங்குந் தனிச்சீர்மை தீர எழில்குலைத்தார்;
ஓங்கப் பிறகுழைத்தார் உற்றுணர்ந்தார்; ஒண்டொடியே!
ஈங்கப் பிழைக்கே இடந்தரநாம் ஒப்புவமேல்
வாங்கப் படுங்காண்,நம் வாழ்வுரிமை! பின்வருவார்
ஏங்கித் தவிப்பதோ? இக்கால் எழாமலே
தூங்கிக் கிடப்பதோ? நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலிப்பிணையே! வீறேலோ ரெம்பாவாய்!
9
களையாய்த் தமிழ்வயலுள் காலிடவேர் ஊன்றி
முளையாக் கிடக்கின்ற மூங்கை மொழியை
உளையாப் பெருமுயல்வால் ஊழ்த்துத் தமிழை
விளையாமற் போவோமேல் வீணானோம்; வீழ்ந்தோம்!
கிளைபரப்பி நின்ற கிளர்தமிழைக் கீழோர்
களையமுற் பட்டங்கே கள்ளியினை ஊன்ற
வளையாய்! இடந்தரலும் வாய்மையோ? வாட்கண்
இளையாய் உறங்கேல் எழுகேலோ ரெம்பாவாய்!
10
இந்நாளாப் பட்ட அடிமைக் கிறக்கத்தால்
செந்நா வடக்கிச் சினமடக்கி உள்ளுணர்வைக்
கொன்னே மடக்கி உறங்குதியோ? கொல்பிடியே!
மின்னே இடையாக வேற்கண்ணே வெல்படையா
இன்னே எழுந்தே எரிபுயலாச் சீறுதியே!
அந்நாள் அயர்ந்த அறியாமைக் குள்நாணி,
நன்னர் உரிமைப்போர் நாட்டுதியே, செய்யபசும்
பொன்னே! பொழுதும் புலர்ந்தேலோ ரெம்பாவாய்!
11
உள்ளம் மலையாத ஆடவரும் தாமலைந்தார்;
கள்ள விலைவாங்கி நல்லுரிமைக் கால்துணித்தார்!
பள்ளத் திறங்கிப் படுசேற்றில் தாம்புரள
உள்ளம் ஒருப்பட்டார்! உண்கண்ணாய்! நீயெழுந்தே
எள்ளல் தவிர்க்க இசையாயின் இம்மண்ணும்
கொள்ளல் தவிரார்! குலக்கொடியே ஈங்கின்னும்
பள்ளிக் கிடத்தியே! பாவைப் படைகூட்டி
வெள்ளம்மேல் பாய்வாய் விரைந்தேலோ ரெம்பாவாய்!
12