பக்கம்:கனிச்சாறு 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


7. பொய்ம்மையே பட்டெனப் போர்த்திக்கொண் டாயா?
புளித்ததும் நுரைத்ததும் தின்னநீ நாயா?
மெய்ம்மையே அறமென்ற செந்தமிழ்ச் சேயா?
மேய்வதே வாழ்வெனச் சொல்லுவதுன் வாயா? (இன்)

8.அரசியல் வாழ்வெனிற் புளுகுதல் அறமா?
அயலவர் முன்னர் உன் சொற்சோர்வு மறமா?
முரசறைந் தரசோச்சல் நீ கல்லாத் திறமா?
முக்கால எல்லைக்கும் நீ பீற்றல் முறமா? (இன்)

9.தமிழனைத் தமிழனே தாழ்த்துகின் றானே!
தமைமீட்க எழுவோரைப் புறம்வீழ்த்து வானே!
சிமிழ்க்காத போரெனில் இவன் நீந்தும் மீனே!
சிற்சில காலமாய் அழிகின்றான் தானே? (இன்)

10.எத்தனை எத்தனைப் பேர்வந்து சொல்வது?
இழுத்திழுத் தேதுயின் றால்என்று வெல்வது?
சொத்தெலாம் போனபின் எவர்வழிச் செல்வது?
சோம்பலை முறியென்றால் எனையாநீ கொல்வது? (இன்)

11.மனைவிக்கும் பிள்ளைக்கும் வாழ்ந்தாய் முன்நாளை!
மற்றவர் தமைமறந் தெழுவாய் இந் நாளை
எனையொப்ப விலையெனில் அவரையும் வாளை
ஏந்தச்செய் திட்டுவா! பார் பகைத் தூளை! (இன்)

12.ஆரியர் இடுவலை அவிழ்க்க ஒண்ணாதே!
அவர்திறம் அறிவென மயங்கி எண்ணாதே!
நேரியர் அவரென நினைந்து பண்ணாதே!
நேயரெ னில்மெய்ப்பூ ணூலும் ஒண்ணாதே! (இன்)

13.தமிழர்க்குத் தமிழ்மொழிப் பற்றடை யாளாம்!
தமிழ்ப்பற்றில் லாதவர் செயலோமாய் மாலம்!
உமிழ்தகுந் தன்மையோர் போடுவார் கோலம்!
ஒன்றிணைந் தெழின்கேட் பாய்பகை ஓலம்! (இன்)

14.அயலவர் சூழ்ச்சி,நீ அறியாத கலையா?
அடிமைக்கு வாய்ச்சோறு நீபெறும் விலையா?
புயல்போலும் பகைசீறின் உனக்கது மலையா?
போவார்க்கும் வருவார்க்கும் நீவாழைக் குலையா? (இன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/133&oldid=1437302" இலிருந்து மீள்விக்கப்பட்டது