பக்கம்:கனிச்சாறு 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


65  பொய் சாகும்; மெய் வெல்லும்!

பொய் சாகத் தான் சாகும்;
புரட்டழியத் தான் அழியும்;
மெய் பூத்துக் காய்த்துக் குலை தள்ளும் - அது
மேன்மேலும் கனிந்து பகை வெல்லும்!

இருள் போகத் தான் போகும்;
இழிவகலத் தான் அகலும்;
மருள் மாய உரைகள் அடி சாயும் - ஆர
வாரத்தின் கொழுமை முடி காயும்!

வயிறெரியத் தான் எரியும்;
வாய் நோகத் தான் நோகும்;
கயிறுதிரிப் போர்க்கு நமைக் கண்டால்! - ஒரு
காலம் வரும்; போற்றுவர் பூச் செண்டால்!

துயர்சேரத் தான் சேரும்;
துணை வருந்தத் தான் வருந்தும்;
அயர்வுருதல் மறவர்க் கழ கன்றே! - பேர்
ஆண்மையன்றோ பொறுத்தல்; குணக் குன்றே!

உளம் நோகத்தான் நோகும்;
உயிர் சோரத் தான் சோரும்;
விளங்கட்டும் தமிழர் குமு காயம்! - உயிர்
வெல்லமில்லை; உரிக்கும்வெங் காயம்!

உடல் வாடத் தான் வாடும்;
உயிர் போகத் தான் போகும்;
கெடல் வந்த போதில் அறங் காக்கும்! - மெய்
கிளைகிளையாய்த் துளிர் விட்டுப் பூக்கும்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/142&oldid=1424763" இலிருந்து மீள்விக்கப்பட்டது