பக்கம்:கனிச்சாறு 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


69  .......!!!.........?

செகப்பிரியர் மில்டனெனும் ஆங்கிலத்துச் சிறந்துயர்ந்த
இலக்கியங்கள் பற்பலவும் தேர்ந்துநாடி
மிகப்படித்து முன்னேறிப் பதவிபெற்று மேனாடும்
கீழ்நாடும் வரவேற்க மேவலுற்றுத்
தகப்பலவும் சீர்பெற்று வாழ்ந்திடினும், திருக்குறளைத்
தீண்டாத - உணராத - தமிழனைப்போய்
மிகப்பெரியன் என்பதிலோர்
பெருமையுண்டோ? மகிழ்ச்சியுண்டோ?
தமிழ்க்குலத்திற் கெள்ளளவும் மேன்மையுண்டோ?

கல்லாத துறையெல்லாம், அறிவியலின் கூறெல்லாம்
கணித்தறிந்து, பட்டம்பெற்று, யார்க்கும் எங்கும்
இல்லாத பெருமையெலாம் புகழெல்லாம் இணைந்துவர
வாழ்ந்திடினும், எந்தமிழின் மெய்ம்மை சான்ற
சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பண்பு மேவானை
விரும்பானை - ஒழுங்கழிந்த தமிழனைப்போய்
வல்லானென் றெவ்வாறு வாய்கூசா துரைத்திடுவேன்?
வாழ்த்திடுவேன்? வாழையடி வாழையென்பேன்?

ஏவலர்கள் கைகட்டி வாய்பொத்தி வரிசையுற
நின்று,வருஞ் சொற்களெல்லாந் தலைமேல்தாங்கி
மேவலுறும் படி,பதவி வாய்த்திடினும் செந்தமிழ்த்தாய்ப்
புரந்திடுவார் தமையறிந்து, மேன்மை செய்யும்
ஆவலிலான் - மனக்கசண்டை
அகற்றலிலான் - ஆன்றதிறம்
அறிதலிலான் ஒருவனைப்போய் அற நூல் ஆய்ந்த
காவலனென் றெங்ஙனம்யான்
கழறிடுவேன்? போற்றிடுவேன்?
கனித்தமிழால் வாழ்த்தியுளங் களிக்குவேனே?

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/148&oldid=1424770" இலிருந்து மீள்விக்கப்பட்டது