பக்கம்:கனிச்சாறு 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  117


72  அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காக்க!

ஆரியப் பார்ப்பான் அன்றைய தமிழனின்
வேரினை வெட்டி வீழ்த்திய நாள் முதல்
தமிழரின் ஆட்சியைத் தமிழரே நடத்துதல்
அமிழ்ந்த மலையை அகழும் அருஞ் செயல்! 5

தப்பித் தவறியோர் தமிழன் எழுந்தே
அப்படி இப்படி ஆட்சியைப் பற்றினால்
இன்னொரு தமிழனே எதிர்ப்பதும், அவனின்
பின்னங் காலைப் பிடித்தே இழுப்பதும்,
அடிக்குழி பறித்தே ஆளைச் சாய்ப்பதும்
வடித்து வைத்த வரலாற்றுச் செய்தி! 10

தமிழனைக் கொண்டே தமிழனைச் சாய்ப்பதில்
சிமிழா விழியோடு ஆரியன் செய்யும்
தந்திர மந்திரம் தமிழர்க்குப் பழங்கதை!
முந்தை இரணியன் கதையினை எண்ணுக!

இற்றைத் தமிழனின் ஆட்சியை எதிர்த்தே 15
ஒற்றை நடிகன் உறுமலும், அவனைப்
பற்றிக் கொண்ட பார்ப்பனர் தூண்டலும்,
வெற்றி காண விளம்பரப் படுத்தலும்,
திரவிடச் சோழனைத் திரவிடச் சேரன்
கரவடங் கொண்டு கழுத்தறுப் பதுவே! 20

கலைஞர் ஆட்சியைக் காசுக்கு வாங்கிய
விலைஞரைக் கொண்டு வீழ்த்தும் கொடுமையை
உண்மைத் தமிழர் ஒருநாளும் பொறுக்கார்!
கண்மயிர் போலும் கருதுவர் உயிரை!

ஒரே ஒரு கல்லில் இருகனி உதிர்க்கும் 25
இராசாசி எற்றிய இறுதிக் கல்லிது!
கலைஞரை வீழ்த்திக் காமராசரின்
நிலையினை உயர்த்துவேன் என்பர், இராசாசி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/153&oldid=1424775" இலிருந்து மீள்விக்கப்பட்டது