பக்கம்:கனிச்சாறு 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 125


74 என்றைக்கு எழுவாயோ?

இன்றைக்கே எழாமல், நீ என்றைக்குத்
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்!
என்றைக்குக் காலமினி ஏற்றபடி
கனிந்துவரும், இந்நாள் போல?
குன்றைத் தூள் செய்கின்ற வல்லுணர்வை
உன்நெஞ்சில் குவிக்கும் வண்ணம்
என்றைக்குப் பாவேந்தன் இனியொருகால்
எழுந்துவந்தே எழுதித் தீர்ப்பான்?

இப்பொழுதே எழாமல், நீ எப்பொழுது
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்!
எப்பொழுதும் பெரியார்போல் இராப்பொழுதும்
பகற்பொழுதும் இளைப்பா றாமல்
முப்பொழுதும் முதுமையிலும் ஊரூராய்த்
தெருத்தெருவாய் முழங்கு கின்ற
ஒப்பரிய இன்னொருவர் இனிவந்தா
உனக்கென்று பேசித் தீர்ப்பார்?

இந்நொடியே எழாமல், நீ எந்நொடியில்
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்!
எந்நொடியும் செந்தமிழை வீழ்த்துதற்கே
எதிர்பார்க்கும் ஆரி யத்தை
அந்நொடியே இடுப்பொடிக்கும் மொழிவல்லார்
தேவநேயப் பாவா ணர்போல்
இந்நிலத்து வேறொருவர் இனிவந்தா
ஆய்ந்துண்மை எடுத்துச் சொல்வார்?

இக்காலே எழாமல், நீ எக்காலை
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்!
எக்காலும், இனியொருகால் இந்நிலத்தை
இருவிழிபோல் காப்ப தற்கே
தக்கார் அண்ணாத்துரைபோல் எவர்வருவார்?
தமிழகத்தின் மேடை தோறும்
முக்காலும் தமிழ்காக்க எவர் முழக்கம்
செய்திடுவார், முனைந்து நின்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/161&oldid=1416751" இலிருந்து மீள்விக்கப்பட்டது