பக்கம்:கனிச்சாறு 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


உடன் பிறப்பை மேல்கீழென் றொதுக்கி விட்டீர்!
ஒண்டவந்த ஆரியனைத் தேவன் என்றீர்!
கடன்பெற்ற வடமொழிக்குக் காவல் செய்தீர்!
கருத்துயர்ந்த தாய்மொழியை எள்ளல் செய்வீர்!
மடன்பெற்ற மூங்கையவன் குருட்டுப் பெண்ணை
மணங்கொண்டு முடமொன்றைப் பெற்ற வாறாய்,
இடமின்றி உரிமையின்றி அடிமைப் பட்டீர்!
னியேனும் மனம் ஒன்றி இனங்காப் பீரே!

-1973


76  இனநலம் பெரிது!

கருக்கும் வெயிலினில் கருகெனக் காயினும்,
காவிரி வற்றி வாய்க் கால்வழி ஓடினும்,
நெருக்கும் வறுமையில் நல்லுயிர் துவளினும்,
நீடிய கோடையில் பயிர்வளங் குன்றினும்,
இருக்கும் நலன்களில் இனநலம் பெரிதென
எந்தமிழ் நல்லினம் நினைந்திடல் வேண்டும்;
செருக்கும் பொறாமையும் சிறுமைச் செயல்களும்
சிதைத்திடும் சிதைத்திடும் இனத்தினை, ஆதலால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/164&oldid=1416755" இலிருந்து மீள்விக்கப்பட்டது