பக்கம்:கனிச்சாறு 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  207


சிங்களன் ஒருபுறம் சிதைக்கிறான் இனத்தை!
சிறியதோர் கல்லையும் எடுத்தானா இங்கே?
வங்காளி, அசாமி, பஞ்சாபி-யாவனும்
வல்லமை கொண்டே எழுந்துநிற் கின்றான்!
எங்கள் தமிழனோ இளித்தவாய்த் தமிழனாய்,
இராசீவ்க்கு மூப்பனாய் இனந்தின்னு கின்றான்!
பொங்கலென் பொங்கல், புழுக்கையர்க் கெல்லாம்?
புதுவேட்டி சேலையேன், காலில்வீழ் வோர்க்கே?

உழவனின் பேர்சொல்லி உழவனைக் கொல்வார்!
உழைப்பவர் நலம்பேசி ஊரடித் துண்பார்!
மழவனின் பேர்சொல்லி வாழ்ந்தவன் இவன்தான்!
மற்றவர்க் கடிமையாய்ப் போனவன் இவன்தான்!
விழவுவே டிக்கையில் வீழ்ச்சி மறப்பதோ?
வேண்டிடும் உரிமைகள் யாவும் துறப்பதோ?
இழவுடை வீட்டினில் விழவென்ன விழவோ?
இனம்சாகும் போதிலே திருவிழா முழவோ?

உரிமையை மீட்டிட முனைந்திடும் சிலபேர்
ஒவ்வொரு நாட்டிலும் நாளும்சா கின்றார்!
நரிமையும் நாய்மையும் நாயகம் கேட்கும்!
நாட்டினை ஆள்கிறான் வடநாட்டுப் பார்ப்பான்!
கரிமையில் தமிழனின் வரலாறு தீட்டக்
காலமும் பார்க்கிறான் சிங்களக் கயவன்!!
எரிநெய்யில் தமிழினம் கருகிடும் போதில்
எவனுக்கும் பொங்கலென றொலிவேண்டும், காதில்?

உயிர்நாடி நரம்புகள் துடிக்கவேண் டாமா?
ஒவ்வொரு தடந்தோளும் புடைக்கவேண் டாமா?
பயிர்நாடும் மழைபோல உரிமைவேண் டாமா?
பழந்தமிழ் இசைமீண்டும் இசைக்கவேண் டாமா?
செயிரேற இனம்பொங்கிச் செழிக்கவேண் டாமா?
சீர்த்தெழும் பகைமுற்றும் சாகவேண் டாமா?
தயிரேறும் பருமத்துச் சுழற்சியில் வெண்ணெய்
தளும்பல்போல் விடுதலை திரளவேண் டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/243&oldid=1437446" இலிருந்து மீள்விக்கப்பட்டது