பக்கம்:கனிச்சாறு 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 209


138

பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே!


மொழியின்றி இனமில்லை; இனமின்றி நாடில்லை;
முந்நிலையும் அழிப்பதற்கே முனைந்தார் இன்றே!
விழியின்றி வழியுண்டோ? வித்தின்றி விளைவுண்டோ?
விழுதின்றி ஆலமரம் நிற்றல் உண்டோ?
வழியின்றித் தமிழ்மக்கள் தவிக்கின்றார்; நாட்குநாள்
வாழ்தற்கும் இயலாமல் வணங்கிச் சாவார்!
பழியின்றிக் காப்பதற்குப் பகலின்றி இரவின்றிப்
பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே!

ஊர்க்கு ஊர் செல்லுங்கள்! உழவர்களை உழைப்பவரை
ஒருங்கிணைத்துக் கூறுங்கள்! உணர்வேற் றுங்கள்!
நேர்க்குநேர் நில்லுங்கள்! நிகழ்வதனைக் கூறுங்கள்!
நெடியவர லாறுகளை நினைவூட் டுங்கள்!
ஆர்க்குஆர் தடையென்னும் அரசியலை விளக்குங்கள்!
அழிந்துவரும் தமிழினத்தின் அழியா நிற்கும்
வேர்க்குவேர் நீருற்றி எருவிட்டு விளையுங்கள்!
வீணர்களை விலக்குங்கள்! விடிவு தோன்றும்!

தமிழ்நிலத்தை விடுவித்துத் தமிழினத்தைக் கட்டுவித்துத்
தமிழ்மொழியைத் தூய்மையுடன் தழைக்கச் செய்வோம்!
அமிழ்கின்ற வரலாற்றைப் புதுப்பிப்போம்! அறிவியலை
வாழ்வியலுக் கொத்தபடி ஆக்கு விப்போம்!
கமழ்கின்ற பண்பாடு மிளிர்கின்ற கலைகளுடன்
கருத்தழிவும் இழிவுணர்வும் இல்லா வாறாய்க்
குமிழ்நின்ற ஒளிகூட்டும் இனநலத்தைக் கட்டுவிப்போம்!
குமுகாய நலஞ்சேர்ப்போம்! கூடு வீரே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/245&oldid=1437595" இலிருந்து மீள்விக்கப்பட்டது