பக்கம்:கனிச்சாறு 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  241


166

நிலைப்பதற்கு என்ன செய்துவிட்டோம்?


ஆயிரத்தின் மேலொருநூ றாண்டுசென்ற
பின்னர்தான், அறச்செல்வர், அறிவின்மேதை,
வாயுரத்தின் பெரும்புலவர், வற்றாத
அறிவூற்று, உயிர்ப்பாறு, தமிழினத்தின்
பாயிரத்தைப் பாடிவைத்த முதல்தலைவர்
வல்லதிரு வள்ளுவர் என் பேராசான்
ஏயபெயர் மக்களிடைத் தெரிந்ததெனில்
இளம்புலவர் புகழ்தேடி அலைதல் ஏனோ?

என்னெழுதி விட்டோம்நாம்? என்ன செய்து
விட்டோம் நாம்? ஈகமென்ன ஆற்றிவிட்டோம்?
முன்னிருந்த அவர்களெல்லாம் மொழியாத
எக்கருத்தை - எவ்வறிவை - முழங்கிவிட்டோம்?
தின்னுதற்கே அலைகின்றோம்; உடுப்பதற்குப்
பணிகின்றோம்; திரிகின்றோம்; மனைவிமக்கள்
மன்னுதற்குப் பெரும்பொருளைச் சேர்க்கின்றோம்;
மறைந்தபின்னும் நிலைப்பதற்கென் செய்துவிட்டோம்?

சிலநூல்கள் எழுதிப்பே ரறிஞரெனச்
சிலுப்புகின்றோம்; ஆட்சியரை மண்டியிட்டு
நலவளங்கள் துய்க்கின்றோம்; இனம் காட்டிக்
கொடுக்கின்றோம்; உள்ளுக்குள் நாறுகின்றோம்!
குலநலன்கள் மறைமுகமாய்ப் பேசுகின்றோம்;
குழுக்கள் பல சேர்க்கின்றோம்; கொள்ளைகொண்டு
நிலபுலன்கள் வாங்குகின்றோம்; பெருமைபெறத்
துடிக்கின்றோம்! நிலைப்பதற்கென் செய்துவிட்டோம்?

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/277&oldid=1437488" இலிருந்து மீள்விக்கப்பட்டது