பக்கம்:கனிச்சாறு 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  59

ஒப்பாரிப் பாட்டோ உனக்கென்று வாய்த்ததுகாண்!
துப்பில்லாப் போனாய்! துகளாகி நீ,சாய்ந்தாய்!

ஆர்நெஞ்சம், திண்கால் அமர்ந்த அரியணையில்
யார்வந் தமருவது? யாராட்சி ஆளுவது? 90
கூழைக் கரும்பின் குருந்தொடித்து வீசுதல்போல்
மோழை வடவர் முதுகொடிப்பாய் என்றிருந்தேன்!
பாளையினைச் சீவிப் பதநீர் வடிப்பதுபோல்
ஆளின் தலையை அறுத்தெறிவாய் என்றிருந்தேன்!
கோழைக்கு முன்வாளைக் கூர்மழுக்கிக் கொண்டாயே!
வாழை இளந்தண்டாய் வந்துமடி வீழ்ந்தாயே!
வல்லடிமை செய்ய, அவர் வாய்வீச்சு வீசியதும்,
கொல்லுதற்கு நின்னைத் குறிபார்த் திருந்ததுவும்,
இந்தியினைக் கொண்டே எழிற்றமிழைச் சாய்த்ததுவும்,
இந்தியமென் றார்த்தே இசைமயக்கில் ஆழ்த்ததுவும், 100
செந்தமிழா நின்னைச் சிறைசெயவே என்றுரைத்தேன்.

எந்தமிழால் சொன்ன எதிர்வறிய மாட்டுகிலை;
கூப்பாடு போட்ட குறிப்புணரக் கூடவில்லை;
நாப்பாடு வேண்டி நயப்பாடு காணவில்லை!
கற்றைக் குடுமியவன் கைக்குப் பிடிகொடுத்தே
இற்றைக் கடிவீழ்ந்தாய்! ஏந்தலே ஏந்துவதார்?
பொன்னார் திருமேனி மண்ணில் புரளுவதோ?
என்னேர் தமிழ்த்திருவை 'இந்தீ' எரிப்பதுவோ?
ஏந்தியவாள் வீச்சுக் கெதிர்வீச்சைக் கண்டிலனே!
காந்தியகண் நோக்கிற் கெதிர்நோக்கைக் கண்டிலனே! 110

நின்னை எவண்காண்பேன்?
நின்மொழி,யார் வாய்கேட்பேன்?
தன்னேர் உயர்பண்பைச் சாற்றுவதார்? தாளேனே!
எண்ணாத நெஞ்சாய், எழுதாத பாடலாய்,
உண்ணாத தீங்கனியாய், ஊட்டாத தாய்முலையாய்,
பூக்காத மொக்காய்ப் புதுக்காத ஊருணியாய்
நோக்காத நல்விழியாய் இக்கால் நுடங்கினையே!
என்பொறுப்பேன் நின்சாவை?
என்வைப்பேன் வல்லுயிரை?
நின்பிணங்காண் சான்றாகும்; நீளுலகில் தூணாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/95&oldid=1424755" இலிருந்து மீள்விக்கப்பட்டது