பக்கம்:கனிச்சாறு 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௩

தமிழகத்தை மீட்பதாகவும். தமிழீழத்தைக் காண்போம் என்பதாகவும் இறந்துவிட்ட தமிழீழ மக்களின் காயாத குருதிமேல் ஆணையிட்டுச் சூளுரைக்கிறது.

85. தமிழீழ விடுதலைக்கான எழுச்சி படிப்படியாக வளர்ந்து வந்தது கண்டு மகிழ்ந்து பாடியது இப்பாடல்.

86. 986ஆம் ஆண்டு சூலைத் திங்கள் சிங்கள வெறிப்படை ஆடிய ஆட்டம் மிகக் கொடுமையானது. பொதுமக்களை யெல்லாம் கொன்று குவித்த அக்கொடுநிகழ்வை எண்ணி அங்கு அவர்கள் அவ்வாறெல்லாம் அல்லல்படுகையில் நாம் என் செய்வோம்! கையற்றோமே! - என்று கவலுறுகிறார் பாவலரேறு.

87. கடந்தபாடலில் சொல்லப்பட்ட சூழலிலேயே ‘தமிழ்ச்சிட்டு’ இதழில் சிறுவர்க்குத் தமிழீழ மக்கள்படும் அவலங்களை எடுத்துரைக்கும் பாடல் இது.

பயிர்களை அழித்திடும் பூச்சிக் கொல்லி மருந்துபோல், உயிர்களை அழிக்கும் சிங்களரை ஒழித்திடும் மருந்திலையே என்ற ஏக்கத்தோடு முடிகிறது பாடல்.

88. 1986 கலவரத்தில் தாய்தந்தை இழந்து ஏதிலியாய்ப் போன குழந்தை ஒன்றை எண்ணி எழுதிய பாடல் இது. நம்மவர்க்கொரு நாடுகிடைத்திடும் அதனால் நலம் உனக்குவரும் என்பதால் அழாதே என்கிற செய்தியில் பாவலரேறு தமிழீழ விடுதலையை உறுதி செய்கிறார்.

89. தமிழீழ விடுதலைக்குப் பெண்களின் பங்களிப்பும் பெருகத் தொடங்கியதையொட்டி இப்பாடல் எழுதப்பெற்றது. தமிழீழம் அமைத்திடப் பாங்கியரே அணிதிரண்டெழுவோம் எனப் பெண்களைத் தமிழீழ விடுதலைக்கு அழைக்கிறார் பாவலரேறு.

90. சிங்களரைச் சிதறடித்து யாழகத்தில் தனித்தரசு நாட்டுவதாலேயே தமிழ்மானம் மண்ணுலகில் நிலைபெறும் என்கிறார் பாவலரேறு.

91. இலங்கையிலே தமிழினம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் அன்றைய (ம.கோ.இரா.) ஆட்சியினர் விழாக்களிலும் வேடிக்கைகளிலும் திளைக்கின்றனர். இவற்றைப் பொறுக்க இயலவில்லையே எனத் தம்மைச் சுமக்கும் தமிழ்நிலமே அவர்களை தரைபிளந்து விழுங்குவாயே என முறையிடுகிறார் பாவலரேறு அவர்கள்.

92. விடுதலைப்புலிகளின் வீரத்தை மெச்சும் பாடல் இது. முதன்முதலில் ‘பிரபாகரன்’ அவர்களின் பெயர்ச்சுட்டி வந்த பாடல். 93. சிங்கள அரசு பேச்சுரைக்கு அழைப்பதாகச் சொல்லிச் சொல்லி இழுக்கின்ற காலத்தை மறுத்து, நேரடிப் போருக்கு மக்கள் புலிகளுடன் பொங்கி யெழுந்திடாவிடில் முழு இனமுமே விழும் - என்று எச்சரிக்கிறார் பாவலரேறு.

94. இராசீவ் - செயவர்த்தனா ஒப்பந்தத்தைத் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டதாய்ப் புலிகள் கூற அதைப் பொறுக்க இயலாமல் பதைபதைத்து எதிரியை எச்சூழலிலும் நம்பாமல், செந்தமிழ் இனத்தை நம்பி இனநலம் மீட்க இணைந்துசெய்க - என அழைக்கிறார் பாவலரேறு. தென்மொழி ஆசிரியவுரைப் பாடலாக வந்ததிப் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/24&oldid=1513056" இலிருந்து மீள்விக்கப்பட்டது