பக்கம்:கனிச்சாறு 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

5  என்றையோ?


கேட்டியோ தோழி, வாழி! நாட்டிடை
மேட்டிமைச் சான்றோர் மெய்வழிப் பிறழ்ந்தனரோ?
ஓரக மகளிர் உயர்நா ணுகுத்தே
ஊரகச் சீர்மை ஒழுங்கூழ்ந் தனரோ?
கெழுதகை ஈகையர் கேடுபட் டாங்கே
இழிதகைப் பட்டரோ? எவண் எவண் காண்புழி
பொய்யும் புலையும் கைவலித் தீதும்
வெய்ய சூழ்வும் வெறிவினை மிகுவும்
ஏழ்மையும் புன்மையும் ஏற்றமில் வாழ்க்கையும்
தாழ்மையும் காழ்ப்பும் தாய்மொழிப் பாழ்மையும்
பிறருயர் வழிக்கும் பேதைப் பெற்றியும்
நறவுக் குடத்துள் நச்சுப் பெய்தென
நல்லோர் ஆயத்துப் புல்லோர் மிகுத்தே
அல்லோர் பல்க அருந்துயர்ப் பட்டு
மாய்தல் என்னையோ? நன்னெறி
பாய்தல் என்றையோ பழிநீங்கி யிவணே!

-1959



6  மாரி வாயில்!

குடையெடுத் தன்ன வடபுல மேகுங்
கொண்டல் காள்! இந் நாடாள
நடையெடுத் தார்வட நாட்டின ரவர்பால்
நண்ணுவி ரேல்,“செம் புதுவெள்ளம்
மடையெடுத் தன்ன, தினவெடுத் தேபல
மறத்தமி ழர்நல் லுணர்வெடுத்தே
படையெடுத் தார்செந் தமிழ்நா டாளப்
பார்த்தனம்! வேர்த்தனம்!" என்றுரைப்பீர்!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/37&oldid=1424528" இலிருந்து மீள்விக்கப்பட்டது