பக்கம்:கனிச்சாறு 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  33

குலமும் சமயக் கூச்சலும் ஒருபுறம்!
நிலமும் நீரும் இவ்வகை நேர்தலால் 190
நலமும் விளைவும் நலிவுறத் தோன்றிய
இளையோர் கூட்டம் ஒருபுறம்! அவரொடு
வளையோர் கலந்திடும் வலிப்புகள் ஒருபுறம்!

- இத்தகு சூழலில் விடுதலை ஏந்திப்
புத்துணர் வாலொரு புரட்சி தோற்றிட
எண்ணிப் புறப்படும் இளைஞரீர்! இந்த
மண்ணில் தோன்றிய மாசறு தொண்டரீர்!
கருத்துப் புரட்சியே முதற்கண் கருதுவீர்!
கருத்துப் புரட்சியே விடுதலைக் கருவி!
அதனால், 200

எழுச்சி பெற்ற இளையோர் யாவரும்,
புழுச்சிறை போலும் புன்மை உலகினை,
சேற்றுப் புலத்தின் பழமைச் செருக்கினை,
மாற்றிடத் துடிக்கும் மனத்தினர் யாவரும்,
மணிமணி யான மாணவ ரனைவரும்

அணியணி யாகப் படைபடை யாக,
ஒன்றாய்த் திரண்டே ஊர்ஊ ராக
நன்றாய் ஊன்றுக புரட்சி நாற்றினை!
நாற்று வளரவே நாளும் கருத்துநீர்
ஊற்றுக; உழைப்பை உரமெனக் கொள்ளுக! 210

ஊக்கம் பெறுவீர்! இராப்பகல் உழைப்பீர்!
தூக்கந் தவிர்ப்பீர்! தூற்றுதல் எள்ளுவீர்!
வன்மையாய் உடலை வளர்ப்பீர்! வறிதாம்
புன்மையும் போலியும் ஒருங்கே புதைப்பீர்!
கருத்து மழையினால் கால நிலத்தினில்
குருத்துவிட் டெழுந்தே உரிமை குலுங்கிடும்!
குலுங்கும் உரிமையில் குமிழ்த்திடும் அதுதான்
இலங்கு விடுதலை எனுமொரு கதிரே!
வங்கா ளந்தரும் பாடம்
இங்கிது வல்லால் வேறொன் றிலதே! 220

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/62&oldid=1424552" இலிருந்து மீள்விக்கப்பட்டது