பக்கம்:கனிச்சாறு 3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  61


முனைப்புற்ற தொண்டர்களே
முனைதல் வேண்டும்!


நல்லதொரு மாட்டுக்கொரு சூடே என்பார் - இந்
நாயினத்துத் தமிழர்பல சூடு பெற்றும்,
வல்லெருமைத் தோலர்களாய் இருப்ப தாலே - ஒரு
வளர்ச்சியதும் காணாமல் வீழ்வே கண்டார்!
வெல்லுதற்கும் தோற்பதற்கும் பேச்சே யில்லை! - நல்ல
வீறுவர வேண்டாமோ? துளியும் காணோம்!
கொல்லுதற்கே ஆட்பட்டார்; அடிமைப் பட்டார்! - தமிழ்க்
கொடிபறக்க வேண்டுமெனில் விழிப்பு வேண்டும்!

விழிப்புற்றார் எல்லாரும் தலைவர் ஆனார்! - மக்கள்
விழிப்படைய உதவாமல் அவரை ஏய்த்தே
செழிப்புற்ற வாழ்க்கையினைத் தேடிக் கொண்டார்! - தம்
சிந்தனையை முயற்சியினைத் தமக்கே செய்தார்!
வழிப்பற்றும் தொண்டர்களோ பிளவு பட்டார்! - நல்ல
வாய்ப்புகளைத் தேடுவதே பொதுத்தொண் டென்றார்!
மொழிப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப் பற்றும் - கொண்ட
முனைப்புற்ற தொண்டர்களே முனைதல் வேண்டும்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/90&oldid=1424583" இலிருந்து மீள்விக்கப்பட்டது