பக்கம்:கனிச்சாறு 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 கனிச்சாறு – நான்காம் தொகுதி


48

குறைகளும் குணங்களும்!


எல்லா நலன்களும் சிறக்கும் ஒருவற்கு
ஏதோ ஓரிரு குறைகள் இருக்கலாம்!
ஏதோ ஓரிரு குறைகளுக் காகவே
பொல்லான் அவனெனப் புகன்று விடாதே!
பொல்லான் அவனெனப் புகன்றிடும் உன்னிலும்
புன்மை உணர்வுகள் ஒருசில பூக்குமே!

கல்லா மாந்தருள் கல்வியால் சிறக்கும்
கவினுறு குணங்களுள் ஓரிரண் டிருக்கலாம்!
கவினுறு குணங்கள் ஓரிரண் டிருப்பினும்,
நல்லான் அவனென நவிலுக உடனே;
நல்லான் அவனென நவில நவிலவே
நன்மைக் குணம்பல அவனிடம் நண்ணுமே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/107&oldid=1440736" இலிருந்து மீள்விக்கப்பட்டது