பக்கம்:கனிச்சாறு 4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 கனிச்சாறு – நான்காம் தொகுதி


50

இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் !


பரட்டைத் தலையும்
பன்னிற ஆடையும்
பாதையில் திரிவதும் அறிவன்று!-வெறும்
வறட்டுப் பேச்சும்
வாய்வெடிச் சிரிப்பும்
வம்பர்க் கியற்கை; பண்பன்று!

தொங்கல் முடியும்
தொளதொள உடையும்
தொம்பர் நடையும் அழகன்று!-நலம்
மங்கும் படிக்கே
இராப்பகல் திரிவது
மாடுகள் இயல்பு; நமதன்று!

தெருவோ ரத்துத்
திண்ணையில் நடையில்
திரளாய்க் கூடிப் பேசுவதும்-அங்கு
வருவோர் போவோர்
வம்புக் கிழுத்து
வாயடி கையடி செய்குவதும்,

ஒருவா றேனும்
உருப்படி யாகா
உலுத்தர் செயல்கள்; இழிவென்க!-இளம்
பருவம், அறிவுப்
பயிர்விளை பருவம்!
பாழாய்ச் செய்தல், அழிவென்க!

இளைஞர் நலமே
எதிர்வரும் நலமாம்!
இன்றே நாளையின் வித்தாகும்!-அதன்
விளைவிழி வாயின்
வீணாம் வாழ்க்கை
வினையே இளமையின் முத்தாகும்!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/109&oldid=1440739" இலிருந்து மீள்விக்கப்பட்டது