பக்கம்:கனிச்சாறு 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103


72

இலகிடும் இன்பங்கள் எத்தனை எத்தனை ?


கண்ணை விழித்தேன்;
காட்சி தெரிந்தது!
காட்சி தெரிந்ததும்
கருத்தும் புலர்ந்தது!

மண்ணும் விண்ணும்
மலைகளும் சோலையும்
மலைமேல் தவழ்ந்த
மாணிக்கப் பரிதியும்

தண்ணிய அருவியும்
தாவிய ஆறும்
தாவிய ஆற்றிடை
மேவிய ஓடமும்,

திண்ணிய நகரமும்
திரிந்தவான் பறவையும்
தெரிந்தன தெரிந்தன!
தெவிட்டாத இன்பமே!

கண்ணில் தெரிந்தஇக்
காட்சிகள் போலவே
காதுகள் கேட்டன
கணக்கிலா ஒலிகள்!

எண்ணிலா ஒலிகளில்
இசையும் இனிமையும்
இயற்கையோ டென்னை
இணைத்துப் பிணித்தன!

மண்ணிலும் விண்ணிலும்
மலிந்து கிடந்து நம்
மனத்தையும் அறிவையும்
மலர்த்தும் இயற்கையில்

நுண்ணிய பேரறி
வாற்றல்கள் எத்தனை?
போற்றிக் கொள்ளுக,
புலன்களால் அவற்றை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/138&oldid=1440806" இலிருந்து மீள்விக்கப்பட்டது