பக்கம்:கனிச்சாறு 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106  கனிச்சாறு - நான்காம் தொகுதி


74

மாணவர் எவர் ?


உடைஉடுப் பதுவும்
ஊர்சுற் றுவதும்
கடைத்தெருக் களிலே
கைகளைக் கோர்த்து,
நடையில் மிடுக்கொடு
நகைத்துத் திரிவதும்
மடயர்கள் ஆவர்!
மாணவர் அல்லர்!

கண்டதைப் பேசிக்
காலம் போக்கி
உண்டதை உரைத்தே
உரக்கச் சிரித்துப்
பெண்டிரைச் சுற்றிப்
பேயாய் அலைவோர்
மண்டுகள் ஆகலாம்;
மாணவர் ஆகார்!

நுரைப்புநெய் யலைப்பி
நொய்யக் கழுவிச்
சிரைப்பிலா வளர்முடி
சிலிர்ப்பச் சீவித்
திரைப்படம், பூங்கா,
தெருக்கடை நிறைப்பவர்
குரைப்புநாய்க் கூட்டமா?
கொள்கை,மா ணவரா?

கருத்தொடு கற்பதும்,
கற்ற கல்வியால்
வருத்தமுற் றறிவை
வளர்த்துக் கொள்வதும்,
திருத்தமாய்ப் பேசித்
திருந்த எழுதிப்
பொருத்தமாய் நடக்கும்
புனிதரே மாணவர்!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/141&oldid=1440809" இலிருந்து மீள்விக்கப்பட்டது