பக்கம்:கனிச்சாறு 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120  கனிச்சாறு - நான்காம் தொகுதி


12. பெண்டிர் வாழ்க்கை.

தேடருஞ் செல்வம் ஆடவர் தேடத்
துணையிருந் தவரொடு துய்த்துப்
பீடுயர் அன்பொடும் அறத்தொடும் நெஞ்சைப்
பிணைத்துடல் பிணைத்துயிர் பிணைத்தே
ஈடறும் இன்பத் திருந்துயிர் புரந்தே
இறுதியி லிசைபடப் பிரிதல்
மாடுயர் கற்பின் மங்கையர்க் காகும்
மங்கல வாழ்வெனச் சொல்வாம்! 13

13.ஆடவர் வாழ்க்கை.

“தன்னைப் போற்றுந் தனியுயிர் மனைவி!
தன்னைப் பேணுலும் அவளே!
அன்னை அன்பினள்! அவளின் உரிமையள்!
ஆருயிர்க் குறுதுணை மருந்தே” -
என்னும் நினைவோ டிணைந்தவட் பிணைந்தே
இனிதீந் தல்லவை தாங்கி
மன்னும் அறத்தொடும் மறத்தொடும் அன்பை
மாந்தலும் ஏந்தலும் ஆணே! 14

14. பொது வாழ்க்கை.

காற்றொடு கலந்த கடிமணம் போலும்,
காரொடு மாமழை போலும்,
ஊற்றொடு கலந்த உறுசுவை போலும்
ஒளியோ டெழுநிறம் போலும்,
கூற்றொடு கலந்த குயின்குரல் போலும்
கூடிய ஆண்பெண் இருவர்
ஏற்றுயர் வொழுங்கோ டுயிர்பலப் புரந்தே
இல்லிருந் துய்வது வாழ்வே! 15

15. சிறப்பு வாழ்க்கை.

உண்டும் உண்ணக் கொடுத்தும் உயிர்க்கே
ஒருபழி மேவிடா வாழ்ந்தும்,
மண்டும் முயல்வொடு மாவுழைப் பெய்தி
மக்கட் கரும்பணி செய்தும்,
அண்டுந் துன்பிற் கசைவுறா நின்றும்
அரும்பே ரின்பினைப் பகிர்ந்தும்
தொண்டும் உயிரும் தோன்றிட வாழ்வார்!
தொல்லுல கெங்கணும் வாழ்வார்! 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/155&oldid=1444181" இலிருந்து மீள்விக்கப்பட்டது